இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ஆனால் 2வது போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்த இந்தியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்தது. அதையடுத்து மூன்றாவது போட்டி ஜூலை 10ஆம் தேதி லண்டனில் இருக்கும் லார்ட்ஸ் மைதானத்தில் துவங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணாவுக்கு பதிலாக ஜஸ்பிரித் பும்ரா விளையாடுவதாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வெற்றி பெறுவதற்கு ஆரம்பத்திலேயே டாஸ் வெல்வது முதல் படியாகவும் அடித்தளமாகவும் பார்க்கப்படுகிறது. ஏனெனில் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தால் பிட்ச்சுக்கு தகுந்தார் போல் பேட்டிங் அல்லது பவுலிங் செய்யலாம்.
பரிதாப உலக சாதனை:
அதனால் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வெற்றி காண்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகும். அப்படிப்பட்ட டாஸ் அதிர்ஷ்டம் சமீப காலங்களாகவே இந்தியாவின் பக்கம் வராமல் அடம் பிடித்து வருகிறது என்றே சொல்லலாம். ஏனெனில் கடந்த 31 ஜனவரி 2025 முதல் இதுவரை இந்தியா 13 சர்வதேச போட்டிகளில் விளையாடுகிறது.
இதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்த அணி என்ற மோசமான பரிதாபமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் 1999 பிப்ரவரி 2 முதல் 1999 ஏப்ரல் 21 வரையிலான காலகட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் 12 தொடர்ச்சியான போட்டிகளில் டாஸ் வீசுவதின் தோற்றதே முந்தைய சாதனை. அதே பட்டியலில் இங்கிலாந்து 3வது இடத்தில் (10 தோல்வி) இருக்கிறது.
அதிர்ஷ்டம் இல்லனா என்ன:
ஏற்கனவே 2023 உலகக் கோப்பை முதல் 2025 மார்ச் மாதம் வரை இந்தியா ஒருநாள் போட்டிகளில் மட்டும் இந்தியா தொடர்ச்சியாக 15 முறை டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்தது. அதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்த அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்தது. அதன் பின் இந்தியா இதுவரை ஒருநாள் போட்டிகளில் விளையாடாமல் இருக்கிறது.
இதையும் படிங்க: கிரிக்கெட்டின் மெக்கா லார்ட்ஸில்.. வழங்கப்பட்ட மிகப்பெரிய 2 கெளரவம்.. 1988 பற்றி சச்சின் நெகிழ்ச்சி பதிவு
அதனால் இன்னும் ஒருநாள் கிரிக்கெட்டில் அந்த உலக சாதனை நீண்டு வருகிறது. ஆனால் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் டாஸ் வெல்லாமலேயே இந்தியா கோப்பையை வென்று சாதனை படைத்தது. எனவே கடந்தப் போட்டியை போல இப்போட்டியிலும் இந்தியா வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.



