194 ரன்ஸ்.. சூப்பர் ஓவரில் வங்கதேசத்திடம் சொதப்பிய இந்தியா.. ரைசிங் ஆசியக் கோப்பையில் சோகம்

IND vs BAN
- Advertisement -

கத்தாரில் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியக் கோப்பை 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் ஜிதேஷ் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்தியா ஏ அணி பரம எதிரி பாகிஸ்தானிடம் பரிதாபமாக தோற்றது. இருப்பினும் கத்துக் குட்டிகளான அமீரகம் மற்றும் ஓமனை தோற்கடித்த இந்தியா ஏ அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.

அதைத் தொடர்ந்து முதல் அரையிறுதிப் போட்டி நவம்பர் 21ஆம் தேதி தோகாவில் நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய வங்கதேசம் 20 ஓவரில் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 194/6 ரன்களை குவித்து அசத்தியது. அதிகபட்சமாக ரகுமான் சோகன் 65 (46), மெஹீரோப் 48* (18), யாசிர் அலி 17* (9) ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

போராடிய இந்தியா:

இந்தியா ஏ அணிக்கு அதிகபட்சமாக குர்ஜப்நீத் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக 195 ரன்களை துரத்திய இந்தியா ஏ அணிக்கு வைபவ் சூரியவன்சி அட்டகாசமாக விளையாடி 38 (15) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் இணைந்து அதிரடி காட்டிய பிரியான்ஸ் ஆர்யா தமது பங்கிற்கு 44 (23) ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார்.

ஆனால் 3வது இடத்தில் களமிறங்கிய நமன் திர் 7 (12) ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் கேப்டன் ஜித்தேஷ் சர்மா அதிரடியாக விளையாட முயற்சித்து 33 (23) ரன்னில் விக்கெட்டை இழந்தார். மிடில் ஆர்டரில் நேஹல் வதேரா நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் ரமன்தீப் சிங் 17 (11) ரன்கள் அடித்து அவுட்டானார்.

- Advertisement -

சூப்பர் ஓவரில் சொதப்பல்:

அதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஒரு பவுண்டரி மற்றும் சிக்சரை பறக்க விட்ட அசுட்டோஸ் சர்மா 13 (6) ரன்கள் அடித்து 5வது பந்தில் விக்கெட்டை இழந்தார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்ட போது அடுத்ததாக வந்த ஹர்ஷ் துபே முழுமூச்சுடன் ஓடி 3* ரன்களை எடுத்தார். அதனால் நேஹல் 32* (29) ரன்களை எடுத்தும் 20 ஓவரில் இந்தியா 194/6 ரன்கள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது.

இதையும் படிங்க: 19 விக்கெட்ஸ்.. இந்தியா மட்டும் ஏமாளியா வாகன்? 100 வருட வரலாறு காணாத பிட்ச் பற்றி ரசிகர்கள் கேள்வி

வங்கதேசத்துக்கு அதிகபட்சமாக ரஹீபுல் ஹசன், அபு ஹைதர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதல் 2 பந்துகளில் ஜிதேஷ் சர்மா, அசுட்டோஸ் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாகி சொதப்பினார்கள். அடுத்ததாக விளையாடிய வங்கதேசத்துக்கும் முதல் பந்தில் யாசிர் அலி அவுட்டானார். ஆனால் 2வது பந்தை இந்திய பவுலர் சூயஸ் ஒய்ட் போட்டதால் 1/1 ரன்கள் எடுத்த வங்கதேசம் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றது. இந்தியா ஏ அணி சோகத்துடன் வீட்டுக்கு கிளம்பியது.

Advertisement