இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. ஹைதராபாத் நகரில் துவங்கிய அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக அதிரடியாக விளையாடி இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் தோற்கடிப்போம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்த இங்கிலாந்து தற்போது முதல் போட்டியில் அதை செய்தும் காட்டியுள்ளது.
இத்தனைக்கும் அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்தை 245 ரன்களுக்கு கட்டுப்படுத்திய இந்தியா பின்னர் 436 ரன்கள் விளாசியது. அதனால் 190 ரன்கள் முன்னிலையும் பெற்ற இந்தியா வெற்றியை கையில் வைத்திருந்தது. ஆனால் அதன் பின் ஓலி போப் அபாரமான சதமடித்து 196 ரன்கள் குவித்ததால் இங்கிலாந்து 231 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
சுமாரான கேப்டன்ஷிப்:
இறுதியில் அதை சேசிங் செய்த இந்தியா மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 202 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பரிதாப தோல்வியை சந்தித்தது. குறிப்பாக வரலாற்றிலேயே முதல் முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் ஒரு போட்டியில் 100க்கும் மேற்பட்ட ரன்களை (190) முன்னிலையாக பெற்றும் இந்தியா மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.
இந்த தோல்விக்கு சுமாரான பேட்டிங் என்பதை தாண்டி ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்தது முக்கிய காரணமாக அமைந்தது என்றே சொல்லலாம். குறிப்பாக 2வது இன்னிங்ஸில் 164/5 என சரிந்த இங்கிலாந்து 420 ரன்கள் குவிக்கும் அளவுக்கு அவருடைய கேப்டன்ஷிப் சுமாராகவே இருந்தது. அதிலும் குறிப்பாக இங்கிலாந்தின் டெயில் எண்டர்கள் ரெஹன் அஹமத் 28, டாம் ஹார்ட்லி 32 ரன்கள் அடிக்கும் அளவுக்கு அவருடைய கேப்டன்ஷிப் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
அதை விட கடந்த 2023 பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் 2 – 1 (4) என்ற கணக்கில் இந்தியா வென்றது. இருப்பினும் அந்த தொடரின் ரோஹித் தலைமையில் கடைசி 2 போட்டியில் 1 தோல்வி 1 டிராவை பதிவு செய்த இந்தியா தற்போது இத்தொடரின் முதல் போட்டியில் தோல்வியை பதிவு செய்தது. அந்த வகையில் கடந்த ஒரு வருடத்திற்குள் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா 3 டெஸ்ட் போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க: இன்னுமா இவர நம்பிட்டு இருக்கீங்க.. தோல்விக்கு காரணமான முக்கிய வீரரை நீக்குமாறு.. ரசிகர்கள் விளாசல்
ஆனால் 2014 – 2021 வரையிலான காலகட்டத்தில் சொந்த மண்ணில் விராட் கோலி தலைமையில் 31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இந்தியா வெறும் 2 போட்டிகளில் மட்டுமே தோற்றது. அந்த வகையில் விராட் கோலி தலைமையில் 7 வருடத்தில் சந்தித்த சறுக்கலை ரோகித் சர்மா தலைமையில் இந்தியா வெறும் ஒரே ஒரு வருடத்தில் சந்தித்துள்ளது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.