வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 404 ரன்கள் எடுத்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையின் ஒரு அங்கமாக டிசம்பர் 14ஆம் தேதியன்று சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய அப்போட்டியில் சுப்மன் கில் 20, கேப்டன் கேஎல் ராகுல் 22, விராட் கோலி 1 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆரம்பத்திலேயே சொற்ப ரன்களில் அவுட்டானதால் 48/3 என தடுமாறிய இந்தியாவை மிடில் ஆர்டரில் ரிசப் பண்ட் 46, புஜாரா 90, ஸ்ரேயாஸ் ஐயர் 86 என முக்கிய வீரர்கள் பொறுப்பான ரன்களை குவித்து மீட்டெடுத்தார்கள்.
மேலும் 8வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வின் 58 ரன்களும் குல்தீப் யாதவ் 40 ரன்களும் எடுத்து இந்தியாவை மேலும் வலுப்படுத்திய நிலையில் வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக மெஹதி ஹசன் மற்றும் தைஜுல் இஸ்லாம் ஆகியோர் தலா 4 விக்கெட்களை எடுத்தனர். அதைத்தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை துவங்கிய வங்கதேசம் முதல் பந்திலிருந்தே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 2வது நாளிலேயே 136/8 என திண்டாடியது.
கிங் கோலி ஆகமுடியாது:
குறிப்பாக சாண்டோ 0, ஜாகிர் ஹசன் 20, யாசிர் அலி 4, லிட்டன் தாஸ் 24, முஸ்பிகர் ரஹீம் 28, கேப்டன் சாகிப் அல் ஹசன் 3 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே அவுட்டாகி சென்றார்கள். இருப்பினும் நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரில் தனி ஒருவனாக இந்தியாவை தோற்கடித்த மெஹதி ஹசன் களத்தில் இருந்ததால் வங்கதேச ரசிகர்கள் கொஞ்சம் நம்பிக்கையுடன் இருந்தனர். அந்த நிலைமையில் இன்று துவங்கிய 3வது நாள் ஆட்டத்தில் பெரிய தொல்லை கொடுப்பதற்கு முன் மெஹதி ஹசனை 25 ரன்களில் காலி செய்த இந்தியா எபோதத் ஹசனையும் 17 ரன்களில் அவுட்டாக்கி வங்கதேசத்தை பாலோ ஆன் பெறும் அளவுக்கு 150 ரன்களுக்கு சுருட்டியது.
அனலாக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும் முகமது சிராஜ் 3 விக்கெட்களையும் சேர்த்தனர். அதனால் 254 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா பாலோ ஆன் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தங்களுடைய 2வது இன்னிங்ஸை விளையாடுவதாக அறிவித்தது நிறைய ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது. ஏனெனில் போட்டி நடைபெறும் மைதானம் முதல் நாளிலிருந்தே பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வருவதுடன் முதல் இன்னிங்ஸில் இந்தியாவின் அற்புதமான பந்து வீச்சில் பெட்டிப் பாம்பாக அடங்கிய வங்கதேசம் 2வது இன்னிங்ஸிலும் 254 ரன்கள் எடுப்பதற்கு அதிக வாய்ப்பில்லை.
அதனால் ஃபாலோ ஆன் கொடுத்தால் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெறுவதற்கு 90% வாய்ப்பு ஏற்பட்டது என்றே கூறலாம். அதனால் பொறுப்பேற்ற போது தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை தன்னுடைய ஆக்ரோஷமான கேப்டன்ஷிப் வாயிலாக 2016 – 2021 வரை தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் அணியாக வெற்றி நடை போட வைத்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்த விராட் கோலி மட்டும் அந்த இடத்தில் கேப்டனாக இருந்திருந்தால் நிச்சயம் ஃபாலோ ஆன் கொடுத்திருப்பார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள்.
அதனால் தான் அவர் இப்போதும் வெற்றிகரமான ஆசிய டெஸ்ட் கேப்டனாக சாதனை படைத்துள்ளார் என்று தெரிவிக்கும் ரசிகர்கள் அதிரடியாக விளையாடுவோம் என்று இப்போட்டிக்கு முன்பாக வாயில் சொன்னாலும் பேட்டிங்கில் அதைக் காட்டத் தவறிய கேஎல் ராகுல் கேப்டனாகவும் அதை செய்வதற்கு தகுதியும் தைரியமும் இல்லாதவர் என்று கலாய்த்து வருகிறார்கள்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2023 ஏலம் : அதிக தொகைக்கு ஏலம் போகக்கூடிய 5 சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர்களின் பட்டியல்
அத்துடன் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் பெரிய ரன்களை எடுக்க தவறியதால் 2வது இன்னிங்ஸில் பெரிய ரன்களை எடுத்து தனது இடத்தை காப்பாற்றிக் கொள்ளும் சுயநல எண்ணத்துடனேயே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் கூறுகிறார்கள். மொத்தத்தில் 2வது இன்னிங்ஸை துவங்கிய இந்தியா 3வது நாள் உணவு இடைவெளியில் 36/0 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ராகுல் 20* ரன்களுடனும் கில் 15* ரன்களுடனும் உள்ளனர்.



