இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. நவம்பர் 14ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 31 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்ததாக விளையாடிய இந்திய அணியும் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்த கொல்கத்தா ஆடுகளத்தில் போராடி 189 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கே.எல் ராகுல் 39, வாஷிங்டன் சுந்தர் 29, ரிசப் பண்ட் 27, ரவீந்திர ஜடேஜா 27 ரன்கள் எடுத்தார்கள். தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக சைமன் ஹார்மர் 4, மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.
மோசமான துவக்கம்:
அதன் பின் 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்ஸில் போராடி 153 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் பவுமா 55*, கோர்பின் போஸ்க் 25 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4, முகமது சிராஜ் 2, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள்.
இறுதியில் 124 என்ற இலக்கை துரத்தும் இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே ஜெய்ஸ்வாலை டக் அவுட்டாக்கிய மார்கோ யான்சென் 3வது ஓவரில் கேஎல் ராகுலை 1 ரன்னில் காலி செய்தார். அதனால்1/2 இந்திய அணி ஆரம்பத்திலேயே திணறியது. இதன் வாயிலாக சொந்த மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 2வது குறைந்த ரன்களை எடுத்த இந்திய ஓப்பனிங் ஜோடி என்ற மோசமான சாதனையை ராகுல் – ஜெய்ஸ்வால் சமன் செய்தனர்.
இந்தியா வெல்லுமா:
இதற்கு முன் கடந்த 2010இல் அகமதாபாத் நகரில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் இந்தியா 1/2 என மோசமான துவக்கத்தைப் பெற்றது. அப்போட்டியில் கௌதம் கம்பீர் டக் அவுட்டான நிலையில் வீரேந்திர சேவாக் 1 ரன் எடுத்து அவுட்டானார். அதே போன்ற மோசமான துவக்கத்தை தற்போது இந்தியா 15 வருடங்கள் கழித்து இப்போட்டியில் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஒரு மாசத்துக்கு முன்னாடியே ஜடேஜா அந்த முடிவை எடுத்துட்டாரு.. டிரேடிங் குறித்து – ராஜஸ்தான் ஓனர் அளித்த பேட்டி
தொடர்ந்து நடைபெறும் ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் நிதானமாக விளையாடி 5*, துருவ் ஜுரேல் 4* ரன்கள் எடுத்துள்ளார்கள். அதனால் 3வது நாள் உணவு இடைவெளியில் இந்தியா 10/2 என தடுமாறி வருகிறது. இன்னும் 8 விக்கெட்டுகள் இருந்தாலும் பிட்ச் பேட்டிங் செய்ய சவாலாக இருப்பதால் இந்தியா வெற்றி பெறுமா என்ற கலக்கம் ரசிகர்களிடம் காணப்படுகிறது.



