84 ரன்ஸ்.. அற்புதமான துவக்கத்தை வீணடித்த இளம் வீரர்.. திடீரென சரிந்த இந்தியா வெல்லுமா?

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் நான்காவது டெஸ்ட் போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து போராடி 353 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 122*, ஓலி ராபின்சன் 58 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தடுமாற்றமாக விளையாடி 307 ரன்கள் மட்டுமே எடுத்தது. குறிப்பாக ஜெய்ஸ்வால் 73 ரன்கள் எடுத்தும் 177/7 என தடுமாறிய இந்திய அணிக்கு முக்கிய நேரத்தில் துருவ் ஜுரேல் 90, குல்தீப் யாதவ் 28 ரன்கள் எடுத்து கை கொடுத்தனர். இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

ரசிகர்கள் பதற்றம்:
அதைத்தொடர்ந்து 46 ரன்கள் முன்னிலையுடன் வலுவான நிலையில் களமிறங்கிய இங்கிலாந்து வெறும் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 60 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவிச்சந்திரன் அஸ்வின் 5, குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். இறுதியில் 192 ரன்களை சேசிங் செய்யும் இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் 3வது நாளிலேயே 40 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர்.

அந்த நிலையில் இன்று துவங்கிய 4வது நாள் ஆட்டத்திலும் தொடர்ந்து நிதானமாக விளையாடிய இந்த ஜோடி 84 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு அற்புதமான துவக்கத்தை கொடுத்தது. ஆனால் அப்போது ஜோ ரூட் சுழலில் தூக்கி அடிக்க முயற்சித்த ஜெய்ஸ்வால் 37 ரன்களில் ஆண்டர்சனின் சிறப்பான கேட்ச்சால் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் அரை சதமடித்து நம்பிக்கை கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மாவும் 55 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

- Advertisement -

ஆனால் அப்போது வந்த இளம் வீரர் ரஜத் படிடார் டக் அவுட்டாகி ரோகித் மற்றும் ஜெய்ஸ்வால் கொடுத்த அற்புதமான துவக்கத்தை வீணடிக்கும் வகையில் பெவிலியன் திரும்பினார். இந்த தொடரில் அறிமுகமாகி அரை சதம் கூட அடிக்காமல் தடுமாறும் அவர் வெற்றியாளரை தீர்மானிக்கக்கூடிய இந்த இன்னிங்ஸில் ரோஹித் – ஜெய்ஸ்வால் ஆகியோர் கொடுத்த நல்ல துவக்கத்தால் அழுத்தமற்ற சூழ்நிலையில் தான் களமிறங்கினார்.

இதையும் படிங்க: டைவ் அடித்து அட்டகாசமான கேட்சை பிடித்ததும் பிளையிங் கிஸ்ஸை பறக்கவிட்ட சர்பராஸ் கான் – எதற்கு தெரியுமா?

ஆனால் அதையும் பயன்படுத்தாத அவர் டக் அவுட்டாகி இந்திய அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தினார். அதனால் இதை விட உங்களுடைய திறமையை நிரூப்பிக்க நல்ல வாய்ப்பு கிடைக்குமா? என ரசிகர்கள் அவர் மீது கோபத்தை வெளிப்படுத்துகின்றனர். அதனால் 84/0 என்ற நல்ல நிலையில் இருந்த இந்தியா திடீரென 100/3 என சரிந்தது. தொடர்ந்து நடைபெறும் போட்டியில் சுப்மன் கில் 18*, ஜடேஜா 3* ரன்களும் எடுத்து 30க்கும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் மெதுவாக விளையாடி போராடி வருகிறார்கள். தற்போதைய நிலையில் நான்காவது நாள் உணவு இடைவெளியில் 118/3 ரன்கள் எடுத்துள்ள இந்தியாவுக்கு இன்னும் 74 ரன்கள் தேவைப்படுவதால் ரசிகர்கள் பதற்றமாகவே இருக்கின்றனர்.

Advertisement