அண்டர் 19 உலககோப்பை 2022 : ஆஸ்திரேலியாவை வீழ்த்தி உலகசாதனையுடன் இந்தியா பைனலுக்கு தகுதி

IND-u-19
- Advertisement -

வெஸ்ட்இண்டீஸ் மண்ணில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான ஐசிசி உலக கோப்பை மிகவும் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. வரலாற்றில் 14வது முறையாக நடைபெறும் இந்த உலகக் கோப்பை முதல் முறையாக இந்த வருடம் மேற்கிந்திய தீவுகளில் கடந்த ஜனவரி 14ம் தேதி அன்று துவங்கியது. இதில் இந்தியா உட்பட உலகின் டாப் 16 அணிகள் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்தின.

Under 19 World Cup

- Advertisement -

இதில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்திருந்த இந்திய கிரிக்கெட் அணி தனது லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து மற்றும் உகாண்டா ஆகிய 3 அணிகளுக்கு எதிராக அபாரமாக செயல்பட்டு 3 தொடர் வெற்றிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து நாக் சுற்றுக்கு தகுதி பெற்றது. அதன்பின் துவங்கிய நாக் அவுட் சுற்றின் காலிறுதி போட்டியில் நடப்பு சாம்பியனாக இருந்த வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெற்று அசத்தியது.

செமி பைனல் :
இதை அடுத்து துவங்கிய அரையிறுதி சுற்றில் நடைபெற்ற 2வது அரையிறுதிப் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை இந்தியா சந்தித்தது. இந்திய நேரப்படி நேற்று மாலை 6.30 மணிக்கு ஆண்டிகுவா நகரில் இருக்கும் கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் யாஷ் துள் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்தியாவின் தொடக்க வீரர்களான அங்கிரிஸ் ரகுவன்ஷி 6 ரன்கள் மற்றும் ஹர்னூர் சிங் 16 ரன்கள் என சொற்ப ரன்களில் அவுட் செய்த ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே இந்தியாவிற்கு அதிர்ச்சி அளித்தது. இதனால் 37/2 என மோசமான தொடக்கம் பெற்ற இந்தியாவை அடுத்து களமிறங்கிய ஷைக் ரசீத் மற்றும் கேப்டன் யாஷ் துள் ஆகியோர் சரிவில் இருந்து மீட்க போராடினார்கள்.

Yash Dhull

முதலில் நிதானமாக பேட்டிங் செய்த இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்களை பந்தாடி 3வது விக்கெட்டுக்கு 204 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டியை முழுமையாக இந்தியாவின் பக்கம் திருப்பினார்கள். இதில் 108 பந்துகளில் 8 பவுண்டரிகள் 1 சிக்சர் உட்பட 94 ரன்களில் அவுட்டான ரசீத் சதம் அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்டாலும் மறுபுறம் அபாரமாக பேட்டிங் செய்த கேப்டன் யாஷ் துள் 110 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் உட்பட சதம் விளாசி 110 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசி நேரத்தில் தினேஷ் பானா வெறும் 4 பந்துகளில் 20* ரன்கள் விளாச நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 290/5 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலியா சார்பில் வில்லியம் சல்சமான் மற்றும் ஜேக் நிஸ்பேட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

- Advertisement -

இந்தியா அபார வெற்றி:
இதை தொடர்ந்து 291 என்ற சிறப்பான இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய பேட்டர்கள் இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சுக்கு பதில் கொடுக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வந்தனர். குறிப்பாக 71/1 என நல்ல தொடக்கத்தை பெற்ற போதிலும் அதன் பின் வந்த வீரர்கள் இந்திய பவுலர்களின் சிறப்பான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் 41.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து அந்த அணி வெறும் 194 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் வாயிலாக 96 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியில் ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக அந்த அணிக்கு லச்லன் ஷா 51 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக அபாரமாக பந்துவீசிய விக்கி ஒஸ்த்வால் 3 விக்கெட்டுகளும் ரவிக்குமார் மற்றும் நிஷாந்த் சித்து ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

IND-u-19

இந்தியா உலகசாதனை :
இந்த மகத்தான வெற்றியின் வாயிலாக ஐசிசி அண்டர் 19 உலககோப்பை 2022 தொடரின் மாபெரும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று இந்தியா அசத்தியுள்ளது. இதையடுத்து இந்த உலக கோப்பையின் மாபெரும் இறுதி போட்டி வரும் “பிப்ரவரி 5ஆம் தேதி இந்திய நேரப்படி மாலை 6.30 மணிக்கு மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆண்டிகுவா நகரில் இருக்கும் சர் விவியன் ரிச்சர்ட்ஸ்” மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று 5வது முறையாக இந்தியா கோப்பையை வெல்லுமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

முன்னதாக இந்த அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியா இந்த உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிக்கு தொடர்ச்சியாக 4வது முறையாக தகுதி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. அதாவது 2016, 2018, 2020, 2022* ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற 4 அடுத்தடுத்த ஐசிசி அண்டர் 19 உலகக்கோப்பையின் இறுதிப் போட்டிகளுக்கு இந்தியா தகுதி பெற்றது. இதன் வாயிலாக இந்த உலக கோப்பை வரலாற்றில் தொடர்ச்சியாக 4 இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்ற முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. அதேபோல் இந்த உலகக்கோப்பை வரலாற்றில் இறுதிப்போட்டிக்கு இந்தியா தகுதி பெறுவது இது 8-வது முறையாகும். அத்துடன் ஏற்கனவே இந்த உலகக்கோப்பையில் இந்தியா 4 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இதன் வாயிலாக ஐசிசி அண்டர் 19 உலக கோப்பை வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான அணியாக இந்தியா ஏற்கனவே சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement