- Advertisement -
ஆசிய கோப்பை

2 முறை கைகொடுக்காமல் அவமானப்படுத்திய இந்திய அணி.. அதிருப்தியில் பாக் கேப்டன் செய்த பதிலடி செயல்

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா தங்களுடைய 2வது வெற்றியைப் பெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 20 ஓவரில் 127/9 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக ஃபர்ஹான் 40, ஷாஹின் அப்ரிடி 33* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 2, அக்சர் படேல் 2, குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்தியா 15.5 ஓவரில் 131/3 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 31, கேப்டன் சூரியகுமார் யாதவ் 47*, திலக் வர்மா 31 ரன்கள் எடுத்தார்கள்

- Advertisement -

கைகொடுத்த இந்தியா:

பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஆயுப் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. முன்னதாக அப்போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி விளையாடக்கூடாது என்று இந்தியாவிலிருந்து ஹர்பஜன் சிங் போன்ற முன்னாள் வீரர்களும் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் தாண்டி அரசின் ஆதரவுடன் விளையாடிய இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தி மக்களுக்கு வெற்றியைப் பரிசளித்தது.

அப்போட்டியின் முடிவில் வழக்கம் போல இரு அணியினரும் ஜென்டில்மேன்களாக கை கொடுத்துக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்காக தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணியினர் இந்திய வீரர்களை கை கொடுப்பதற்காக பார்த்தனர். ஆனால் போட்டியை முடித்த சூரியகுமார் மற்றும் சிவம் துபே ஆகியோர் பாகிஸ்தான் வீரர்களுக்கு கை கொடுக்காமல் நேரடியாக பெவிலியன் சென்றனர்.

- Advertisement -

பாகிஸ்தான் அதிருப்தி:

அதே போல மற்ற இந்திய வீரர்கள், கௌதம் கம்பீர் உள்ளிட்ட பயிற்சியாளர் குழுவும் வெற்றி முடிந்ததும் பாகிஸ்தான் அணிக்கு கை கொடுக்காமல் பெவிலியனுக்குள் சென்று விட்டனர். அதற்கு முன் டாஸ் வீசிய பின் பாகிஸ்தான் கேப்டனுக்கு சூரியகுமாரும் கைகொடுக்கவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள்.

அதற்கு தங்களுடைய சார்பில் எதிர்ப்பை தெரிவிக்கும் நோக்கத்திலேயே பாகிஸ்தான் அணிக்கு இந்திய அணியினர் கை கொடுக்கவில்லை என்றே சொல்லலாம். மறுபுறம் பாகிஸ்தான் அணியினர் கை கொடுக்காமல் அதிருப்தியுடன் பெவிலியன் சென்றனர். அதற்கு பதிலடியாக போட்டியின் முடிவில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மைதானத்துக்கு வந்து தொகுப்பாளரிடம் பேசவில்லை.

இதையும் படிங்க: பாகிஸ்தான் வெற்றியை இந்திய ராணுவம், மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.. வெற்றிக்கு இதான் காரணம்.. சூரியகுமார் பேட்டி

பொதுவாக போட்டி முடிந்ததும் வெற்றி கேப்டன், தோல்வியடைந்த கேப்டன், ஆட்டநாயகன் ஆகியோர் பேசுவார்கள். ஆனால் அப்போட்டியில் இந்திய கேப்டன் சூரியகுமார், ஆட்டநாயகன் குல்தீப் ஆகியோர் மட்டுமே பேசினர். தங்களுக்கு கை கொடுக்காத அதிருப்தியில் பாகிஸ்தான் கேப்டன் வந்து பேசவில்லை. மொத்தத்தில் இந்திய அணி தங்களுக்கு கை கொடுக்காமல் அவமானப்படுத்தியுள்ளதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் விமர்சிக்கிறார்கள்.

- Advertisement -