488 ரன்ஸ்.. ஸ்ரேயாஸ் ஐயர் அணியை பந்தாடிய திலக் வர்மா சூப்பர் கம்பேக்.. 2வது தோல்வியில் தப்புமா?

Tilak Varma
- Advertisement -

துலீப் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 2வது ரவுண்டில் அனந்தபூரில் செப்டம்பர் 12ஆம் தேதி இந்தியா ஏ மற்றும் இந்தியா டி அணிகள் மோதும் போட்டி துவங்கின. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா டி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ அணி போராடி 290 ரன்கள் குவித்தது.

ஒரு கட்டத்தில் 93-5 என தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் அபாரமாக விளையாடிய சம்ஸ் முலானி அரை சதமடித்து 89, தானுஸ் கோட்டியான் 53 ரன்கள் அடித்து கை கொடுத்தனர். இந்தியா டி அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா டி அணி சுமாரான பேட்டிங்கை வெளிப்படுத்தி வெறும் 183 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

சொதப்பிய இந்தியா டி:

கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 0, சஞ்சு சாம்சன் 5 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்க தவறிய அந்த அணிக்கு அதிகபட்சமாக தேவ்தூத் படிக்கல் 92, ஹர்ஷித் ராணா 31 ரன்கள் எடுத்தனர். இந்தியா ஏ சார்பில் அதிகபட்சமாக கலில் அகமது மற்றும் ஆகீப் கான் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

அதைத்தொடர்ந்து 107 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா ஏ அணிக்கு சிறப்பாக விளையாடிய கேப்டன் மயங் அகர்வால் 115 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 56 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய மற்றொரு துவக்க வீரர் பிரத்தம் சிங்குடன் அடுத்ததாக களமிறங்கிய திலக் வர்மா ஜோடி சேர்ந்தார்.

- Advertisement -

திலக் வர்மா கம்பேக்:

2வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஸ்ரேயாஸ் ஐயர் அணியை பந்தாடிய அந்த ஜோடியில் பிரதம் சிங் சதமடித்து 122 ரன்கள் விளாசி அவுட்டானார். அடுத்ததாக வந்த ரியான் பராக் 20 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய திலக் வர்மா தம்முடைய பங்கிற்கு ஸ்ரேயாஸ் ஐயர் அணியை பந்தாடினார். நேரம் செல்ல செல்ல மிகச் சிறப்பாக விளையாடிய அவரும் சதமடித்து 111* ரன்கள் குவித்தார்.

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடியதால் இந்தியாவுக்காக அறிமுகமான திலக் வர்மா டி20 கிரிக்கெட்டில் நன்றாக விளையாடினார். அதனால் அடுத்த சுரேஷ் ரெய்னா என்று ரசிகர்களிடம் பாராட்டை வாங்கிய அவர் 2024 ஐபிஎல் தொடரில் காயமடைந்தார். தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ள அவர் சதத்துடன் கம்பேக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இந்தியரான என்னை பிசிசிஐ வேணாம்ன்னு சொல்லிட்டாங்க.. தோனி, கோலி மாற்றத்தை செஞ்சாங்க.. ஜான்டி ரோட்ஸ்

இறுதியில் அவருடன் சேர்ந்து விளையாடிய சஷ்வந்த் ராவத் 64* ரன்கள் எடுத்த உதவியுடன் இந்தியா ஏ அணி 380-3 ரன்கள் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து 488 ரன்களை துரத்தும் இந்தியா டி அணி 3வது நாள் முடிவில் 62-1 ரன்கள் எடுத்துள்ளது. அதர்வா டைட் டக் அவுட்டான அந்த அணிக்கு யாஸ் துபே 15*, ரிக்கி புய் 44* ரன்கள் எடுத்துள்ளனர். ஆனால் இன்னும் 426 ரன்கள் பின்தங்கியுள்ளதால் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா டி அணி முதல் ரவுண்டை போல இப்போட்டியிலும் 2வது தோல்வியை சந்திக்க வாய்ப்புள்ளது.

Advertisement