ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி துபாயில் பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கியது. அதில் நடப்புச் சாம்பியன் பாகிஸ்தான் தங்களுடைய முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்தது. எனவே இந்தியாவுக்கு எதிராக வென்றால் மட்டுமே செமி ஃபைனல் வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற கட்டாயத்தில் பாகிஸ்தான் களமிறங்கியது.
மறுபுறம் வங்கதேசத்தை முதல் போட்டியில் தோற்கடித்த இந்தியா இந்தப் போட்டியில் பாகிஸ்தானையும் வீழ்த்தி ஆரம்பத்திலேயே செமி ஃபைனலை உறுதி செய்ய தயாராக உள்ளது. அந்த சூழ்நிலையில் இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யவில்லை என கேப்டன் ரோஹித் தெரிவித்தார்.
அதிர்ஷ்டம் இல்லயே:
இருப்பினும் இதையும் சேர்த்து இந்தியா கடைசியாக விளையாடிய 12 ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக 2023 உலகக் கோப்பை செமி ஃபைனலில் கடைசியாக நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா டாஸ் வென்றிருந்தது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஃபைனலில் டாஸ் தோற்ற இந்தியா கோப்பையையும் நழுவ விட்டது.
அதன் பின் 2023 தென்னாபிரிக்கா (3 போட்டி), 2024 இலங்கை (3 போட்டி) ஒருநாள் தொடர்களில் தொடர்ச்சியாக டாஸ் வீசுவதில் இந்தியா தோல்வியை சந்தித்தது. சமீபத்திய இங்கிலாந்து தொடரிலும் 3 போட்டிகளிலும் டாஸ் வீசுவதில் தோல்வியை மட்டுமே சந்தித்த இந்தியா தற்போது சாம்பியன்ஸ் டிராபியின் முதல் 2 போட்டிகளிலும் தோற்றுள்ளது. அந்த வகையில் கடைசி 12 ஒருநாள் போட்டிகளில் 12 முறை இந்தியா தொடர்ச்சியாக டாஸ் வீசுவதில் தோல்வியைக் கண்டுள்ளது.
பரிதாப உலக சாதனை:
இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிகப் போட்டிகளில் டாஸ் தோல்வியை சந்தித்த அணி என்ற மோசமான பரிதாபமான உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் மார்ச் 2011 – ஆகஸ்ட் 2013 காலகட்டங்களில் நெதர்லாந்து அணி 11 முறை டாஸ் வீசுவதில் தோல்வியை சந்தித்ததே முந்தைய சாதனை. பொதுவாக டாஸ் என்பது திறமையைத் தாண்டி அதிர்ஷ்டத்தைப் பற்றிய விஷயமாகும்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் ட்ராபி: டாஸ் பாகிஸ்தான் ஜெயிச்சா என்ன? பிட்ச் மாறினாலும் எங்களுக்கு இது தெரியும்.. ரோஹித் பேட்டி
அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் 2023, 2024 தாண்டி 2025ஆம் ஆண்டிலும் 3வது வருடமாக இந்தியாவின் பக்கம் வராமல் அடம் பிடிக்கிறது. ஆனால் செமி ஃபைனல் போன்ற நாக் அவுட் சுற்றில் திறமையைத் தாண்டி அதிர்ஷ்டமும் வெற்றிக்கு முக்கியமாகும். எனவே அப்போதாவது டாஸ் எனும் அதிர்ஷ்டம் இந்தியாவின் பக்கம் அடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகும்.



