தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் பங்கேற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி அக்டோபர் 2ஆம் தேதியான நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா மிரட்டலாக பேட்டிங் செய்து 20 ஓவரில் 237/3 ரன்கள் சேர்த்தது. குறிப்பாக 10 ஓவர்கள் வரை விளையாடி 96 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அற்புதமான அடித்தளமிட்ட ஓப்பனிங் ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா 7 பவுண்டரி 1 சிக்சருடன் 43 (37) ரன்களிலும் அதிரடி காட்டிய ராகுல் 5 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 57 (28) ரன்களிலும் அவுட்டானார்கள்.

அதை அடுத்ததாக களமிறங்கி கச்சிதமாக பயன்படுத்திய சூர்யகுமார் யாதவ் விராட் கோலியுடன் 3வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 5 பவுண்டரி 5 சிக்சர்களுடன் நாலாபுறமும் சுழன்றடித்து 61 (22) ரன்களில் ரன் அவுட்டானார். இருப்பினும் கடைசி வரை அவுட்டாகாத விராட் கோலி தனது பங்கிற்கு 7 பவுண்டரி 1 சிக்சருடன் 49* (28) ரன்கள் எடுக்க இறுதியில் தினேஷ் கார்த்திக் 1 பவுண்டரி 2 சிக்சருடன் 17* (7) ரன்கள் குவித்து ஃபினிசிங் செய்தார்.
போராடிய தென்ஆப்பிரிக்கா:
தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக கேஷவ் மஹராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 238 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு கேப்டன் பவுமா 0, ரோசவ் 0 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே டக் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்ததால் 1/2 என்ற மோசமான தொடக்கத்தை பெற்றது. அப்போது களமிறங்கி அதிரடி காட்ட முயன்ற மார்க்ரம் 33 (19) ரன்களில் அவுட்டானது மேலும் பின்னடைவை கொடுத்தது. அதனால் 47/3 என மேலும் தடுமாறிய அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கிய டேவிட் மில்லர் மறுபுறம் நின்ற குயின்டன் டி காக் உடன் இணைந்து அதிரடியாக ரன்களை குவித்தார்.

ஆரம்பத்தில் நிதானத்தை காட்டி விக்கெட்டை விடாமல் நங்கூரத்தை போட்ட இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல இந்திய பவுலர்கள் வெளுத்து வாங்கி வெற்றிக்கு போராடியது. இவர்களை பிரிக்க இந்தியா போட்ட திட்டங்களை தவிடுபொடியாக்கிய இந்த ஜோடியில் டீ காக் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 69* (48) ரன்களும் டேவிட் மில்லர் 8 பவுண்டரி 7 சிக்சருடன் சதமடித்து 106* (47) ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் போராடிய போதிலும் 20 ஓவரில் 221/3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதனால் தப்பிய இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வென்று 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்றி அசத்தியது.
வரலாறு படைத்த இந்தியா:
இந்த வெற்றிக்கு போராடிய மில்லரும் அல்லாமல் முக்கிய பங்காற்றிய சூர்யாவும் அல்லாமல் கேஎல் ராகுல் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். முன்னதாக இப்போட்டியில் 237/3 குவித்த இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற வெஸ்ட் இண்டீஸ் சாதனையை தகர்த்து உலக சாதனை படைத்தது.

அந்த பட்டியல்:
1. இந்தியா : 237/3, கௌகாத்தி, 2022*
2. வெஸ்ட் இண்டீஸ் : 236/6, ஜோகன்னஸ்பர்க், 2015
3. இங்கிலாந்து : 234/6, பிரிஸ்டோல், 2022
4. இங்கிலாந்து : 230/8, மும்பை,2016
அத்துடன் இப்போட்டியில் 13 சிக்ஸர்களை பறக்கவிட்ட இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக சிக்சர்களை அடித்த அணி என்ற வெஸ்ட் இண்டீஸ் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. இவ்விரு அணிகளைத் தவிர வேறு எந்த அணியும் ஒரு காலண்டரில் 200 சிக்சர்களை அடித்ததில்லை. அந்த பட்டியல்:
1. இந்தியா : 216* சிக்ஸர்கள் (2022)
2. வெஸ்ட் இண்டீஸ் : 214 (2021)

அதைவிட வரலாற்றில் முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் ஒரு டி20 தொடரை வென்று இந்தியா புதிய வரலாற்றை எழுதியுள்ளது. கடந்த 2015 முதல் முறையாக சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொண்டு 2 – 0 (3) என்ற கணக்கில் தொடரை தோற்ற இந்தியா 2019இல் நடைபெற்ற தொடரை மழையின் குறுகீட்டால் 1 – 1 (3) என சமன் மட்டுமே செய்தது. அதன்பின் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரும் மழையால் 2 – 2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இதையும் படிங்க : IND vs SA : டி20 கிரிக்கெட்டில் 2 புதிய உலக சாதனைகள் உட்பட படைத்த சாதனைகளின் பட்டியல் இதோ
அதனால் பொதுவாகவே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற எஞ்சிய அணிகளை அசால்டாக தோற்கடித்து சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக மட்டும் தொடர்ச்சியாக தோற்று வந்த கதைக்கு நேற்று முற்றுப்புள்ளி வைத்து நிம்மதியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



