92/0 டூ 247 அவுட்.. பஸ்பால் இங்கிலாந்தை அடக்கிய இந்தியா.. ஸ்டோக்ஸை முந்தி சிராஜ் அபார சாதனை

Ind vs eng oval 22
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்ற வருகிறது. ஜூலை 31ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கருண் நாயர் 52, சாய் சுதர்சன் 38 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கஸ் அட்கின்ஷன் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அடுத்து விளையாடிய இங்கிலாந்துக்கு துவக்க வீரர்கள் ஜாக் கிராவ்லி – பென் டக்கெட் ஆகியோர் அதிரடியாக விளையாடினார்கள். குறிப்பாக பஸ்பாஸ் ஸ்டைலில் டி20 போல விளையாடி இந்திய பவுலர்களை வெளுத்து துவங்கிய அந்த ஜோடி வெறும் 77 பந்துகளில் 92 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் குவித்து திணறடித்தது. அதனால் இங்கிலாந்து குறைந்தது 300 ரன்களை அடிப்பதற்கான துவக்கத்தையும் பெற்றது.

- Advertisement -

அடக்கிய இந்தியா:

ஆனால் அப்போது பென் டக்கெட் 43 (38) ரன்களில் ரிவர்ஸ் ஸ்வீப் அடிக்க முயற்சித்து ஆகாஷ் தீப் வேகத்தில் விக்கெட்டை இழந்தார். அதே போல மறுபுறம் அரை சதமடித்த கிராவ்லி 64 (57) ரன்களில் பிரசித் கிருஷ்ணா வேகத்தில் பெவிலியன் திரும்பினார். அடுத்ததாக வந்த கேப்டன் ஓலி போப்பை 22 ரன்னில் காலி செய்த சிராஜ் இங்கிலாந்தின் முதுகெலும்பு ஜோ ரூட்டையும் 29 ரன்களில் அவுட்டாக்கினார்.

மிடில் ஆர்டரில் ஹாரி ப்ரூக் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்புறம் ஜேக்கப் பேத்தல் 6 ரன்னில் சிராஜ் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். லோயர் மிடில் ஆர்டரில் ஜேமி ஸ்மித் 8, ஜேமி ஓவர்டன் 0, கஸ் அட்கின்சன் 11 ரன்களில் பிரசித் கிருஷ்ணா வேகத்தில் நடையைக் கட்டினார்கள். இறுதியில் ஹாரி ப்ரூக் போராடி 53 ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

சிராஜ் சாதனை:

அதனால் அதிரடியாக துவங்கிய பஸ்பால் இங்கிலாந்தை 247 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா ஓரளவு அடக்கி அசத்தியது. இந்திய அணிக்கு அதிகபட்சமாக சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர். இதையும் சேர்த்து சிராஜ் தொடரில் மொத்தம் 18* விக்கெட்களை எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அப்படின்னா நாங்க மட்டும் வாயை மூட்டிகிட்டு போகனுமா? கண்டித்த அம்பயரிடம் நியாயம் கேட்ட ராகுல்.. நடந்தது என்ன?

அதன் வாயிலாக இத்தொடரில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ் சாதனையை உடைத்து சிராஜ் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் 17 விக்கெட்டுகள் எடுத்த ஸ்டோக்ஸ் தற்போது 2வது இடத்தில் இருக்கிறார். இத்தனைக்கும் பும்ரா போல எந்த பணிச்சுமையையும் சொல்லாத சிராஜ் 5 போட்டிகளிலும் விளையாடி இந்தியாவுக்காக அனைத்தையும் கொடுப்பது ரசிகர்களின் பாராட்டுகளைப் பெறுவதாக அமைகிறது.

Advertisement