இங்கிலாந்தில் 2024 உலக சாம்பியன்ஸ் ஆஃப் லெஜெண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி கோப்பையை வென்று சாதனை படைத்தது. குறிப்பாக ஜூலை 13ஆம் தேதி பர்மிங்காம் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியை இந்தியா சாம்பியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் சாம்பியன்ஸ் 20 ஓவரில் 156/6 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சோயப் மாலிக் 41 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அனுரீத் சிங் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 157 ரன்களை துரத்திய இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு ராபின் உத்தப்பா 10, சுரேஷ் ரெய்னா 4 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
மாஸ் பின்னணி:
இருப்பினும் அம்பத்தி ராயுடு அதிரடியாக விளையாடி 50 (30) ரன்கள் எடுத்தார். அவருடன் குர்கீரத் சிங் 34 (33), யூசுப் அத்தான் சரவெடியாக 30 (16), கேப்டன் யுவராஜ் சிங் 15* ரன்கள் எடுத்தனர். அதனால் 19.1 ஓவரில் 159/5 ரன்கள் எடுத்த இந்தியா சாம்பியன்ஸ் 2007 டி20 உலகக் கோப்பை ஃபைனல் போல பாகிஸ்தானை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது.
குறிப்பாக 2007இல் 5 ரன்கள் வித்தியாசத்தில் தோனி தலைமையில் வென்ற இந்தியா இம்முறை யுவராஜ் தலைமையில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முன்னதாக இந்தத் தொடரில் ஆரம்பத்தில் தடுமாற்றமாக விளையாடிய இந்தியா சாம்பியன்ஸ் அணி லீக் சுற்றில் பாகிஸ்தானிடம் 68 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. குறிப்பாக ஜூலை 6ஆம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 243 ரன்கள் அடித்து நொறுக்கியது.
அதை தொடர்ந்து சேசிங் செய்த இந்தியாவை 175 ரன்களுக்கு கட்டுப்படுத்திய பாகிஸ்தான் லீக் சுற்றில் வெற்றி கண்டது. அப்போது 2024 டி20 உலகக் கோப்பையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தங்களை தோற்கடித்த இந்தியாவை இங்கே பழி தீர்த்து விட்டதாக பாகிஸ்தான் சாம்பியன்ஸ் அணியின் கேப்டன் யூனிஸ் கான் தெரிவித்தார். இது பற்றி ஜூலை 6இல் அவர் பேசியது பின்வருமாறு.
“2024 டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் நாக் அவுட் செய்யப்பட்ட விதம் மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்தது. எனவே எங்கே நாங்கள் இந்தியாவை தோற்கடித்து பழி தீர்த்து எங்களுடைய ரசிகர்களின் முகத்தில் புன்னகையை கொண்டு வர விரும்பினோம்” என்று கூறினார். அதே போல சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் ரசிகர்கள் 2024 டி20 உலகக் கோப்பையில் சந்தித்த தோல்விக்கு இந்தியாவை பழி தீர்த்து விட்டதாக கொக்கரித்தனர்.
இதையும் படிங்க: இதை முதல் மேட்ச்லயே செஞ்சுருந்தா இந்நேரம் 4 – 0ன்னு லீடிங்ல இருப்போம்.. கேப்டன் கில் பேட்டி
ஆனால் அப்போது அமைதியாக இருந்த இந்தியா சாம்பியன்ஸ் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்து உண்மையான பழியை தீர்த்து கோப்பையை வென்றது. அதனால் வழக்கம் போல தற்போது இந்திய ரசிகர்கள் தேடிச் சென்று பாகிஸ்தான் ரசிகர்களை கலாய்த்து வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.



