54 ரன்ஸ்.. வாழ்வா – சாவா போட்டியில் தோற்றும் இந்திய சாம்பியன்ஸ் செமி ஃபைனல் சென்றது எப்படி?

- Advertisement -

இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடி வரும் உலக சாம்பியன்ஸ் லீக் 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஜூலை பத்தாம் தேதி நார்த்தம்டன் நகரில் இந்திய சாம்பியன்ஸ் மற்றும் தென்னாப்பிரிக்க சாம்பியன்ஸ் அணிகள் மோதின. அந்த 2 அணிகளுமே தங்களுடைய முதல் 4 போட்டிகளில் தலா 2 வெற்றி 2 தோல்விகளை பதிவு செய்திருந்தன.

அதனால் செமி ஃபைனலுக்கு தகுதி பெற அந்தப் போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் 2 அணிகளும் விளையாடின. அந்த சூழ்நிலையில் துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய சாம்பியன்ஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய தென்னாப்பிரிக்கா 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 210/8 ரன்கள் குவித்தது.

- Advertisement -

செமி ஃபைனலில் இந்தியா:
அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜேக் சினிமேன் 73 (43), ரிச்சர்ட் லெவி 60 (25) ரன்கள் எடுத்து அசத்தினார்கள். இந்திய சாம்பியன்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக ஹர்பஜன் சிங் 4 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 211 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா 23 (10), நமன் ஓஜா 5 (7), சுரேஷ் ரெய்னா 21 (24), ராயுடு 2 (6), கேப்டன் யுவராஜ் சிங் 5 (5) ரன்களில் சீரான இடைவெளிகளில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர்.

அதனால் 77/5 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இந்தியா சாம்பியன்ஸ் அணிக்கு மிடில் ஆர்டரில் யூசுப் தான் மற்றும் இர்பான் பதான் ஆகிய சகோதரர்கள் ஜோடி சேர்ந்து வெற்றிக்கு போராடினர். இருப்பினும் 6வது விக்கெட்டுக்கு 55 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து போராடிய அந்த ஜோடியில் இர்பான் பதான முக்கிய நேரத்தில் 35 (21) ரன்களில் ரன் அவுட்டானார். அதனால் மறுபுறம் யூசுப் பதான் அரை சதமடித்து 54* (44) ரன்கள் எடுத்து போராடியும் 20 ஓவரில் இந்தியா சாம்பியன்ஸ் 156/6 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

அதனால் 54 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா சார்பில் அதிகபட்சமாக வெர்னோன் ஃபிளாண்டர் விக்கெட்டுகள் எடுத்தார். ஆனால் அப்படி பெரிய வெற்றியை பதிவு செய்தும் தென்னாப்பிரிக்கா பரிதாபமாக லீக் சுற்றுடன் இத்தொடரிலிருந்து வெளியேறியது. ஏனெனில் லீக் சுற்றின் முடிவில் அந்த அணி 4 புள்ளிகளுடன் -1.340 ரன்ரேட் பெற்றது. ஆனால் தோல்வியை சந்தித்த இந்தியா சாம்பியன்ஸ் அணி அதே 4 புள்ளிகளுடன் -1.267 ரன்ரேட் பெற்றது.

இதையும் படிங்க: இந்திய அணிக்காக 7 ஆண்டுகள் 68 போட்டிகளில் விளையாடி முதல் முறையாக சாதித்த வாஷிங்டன் சுந்தர் – விவரம் இதோ

அதனால் ரன்ரேட் காரணமாக அதிர்ஷ்டத்துடன் நூலிலையில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்தியா சாம்பியன்ஸ் அணி செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அதனால் ஜூலை பன்னிரண்டாம் தேதி நடைபெறும் செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள இந்தியா சாம்பியன்ஸ் தகுதி பெற்றது. மறுபுறம் வாழ்வா – சாவா போட்டியில் வெற்றி பெற்றும் வழக்கம் போல முக்கிய நேரத்தில் துரதிஷ்டம் துரத்தியதால் தென்னாபிரிக்கா பரிதாபமாக வெளியேறியது.

Advertisement