இந்தியாவுக்கு விளையாடுவது இப்பல்லாம் தூசியா போச்சு – தேர்வுக் குழுவை விளாசும் வாசிம் ஜாபர் – வைக்கும் நியாயமான கோரிக்கை

Jaffer
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை மற்றும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பிய இந்தியா அடுத்ததாக பக்கத்தில் இருக்கும் வங்கதேசத்துக்கு பயணித்து 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் களமிறங்குகிறது. முன்னதாக நடைபெற்ற நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் சுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், தமிழகத்தின் வாஷிங்டன் சுந்தர் போன்ற நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி அசத்தினார்கள். ஆனால் 2023இல் இந்திய மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பை தயாராகும் வகையில் அடுத்ததாக நடைபெறும் வங்கதேச தொடரில் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் திரும்புவதால் அசத்தலாக செயல்பட்ட சுப்மன் கில் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதே சமயம் வாய்ப்பு பெறும் சில இளம் வீரர்களும் அடுத்த வாய்ப்புகளை பெறும் அளவுக்கு அசத்தலாக செயல்படுவதில்லை. அதனால் இப்போதெல்லாம் சில வீரர்கள் வந்த வாக்கிலேயே அணியிலிருந்து காணாமல் போகும் நிலைமை சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. இதற்கெல்லாம் காலம் காலமாக இருந்த இந்திய கிரிக்கெட் வீரர்களின் தேர்வு முறையில் ஐபிஎல் தொடரால் வந்த ராக்கெட் வேக மாற்றமே முக்கிய காரணமாகும். ஏனெனில் ஒரு காலத்தில் ரஞ்சி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடரில் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து வாய்ப்பு கொடுக்கப்படும்.

- Advertisement -

வாசிம் ஜாபர் கோரிக்கை:
ஆனால் ஐபிஎல் வந்த பின் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்படும் வீரர்களை கண்டுகொள்ளாத தேர்வுக்குழு ஐபிஎல் தொடரில் அசத்தும் வீரர்களுக்கு முன்னுரிமை கொடுத்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கிறது. அதிலும் குறிப்பாக நடப்பு சீசனில் அதிரடியாக ரன்களை குவிக்கும் வீரர்களுக்கு உடனடியாக வாய்ப்பு கிடைத்து விடுகிறது. அதனால் இந்தியாவுக்காக விளையாடும் அருமையை உணராத சில வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி சுமாராக செயல்பட்டு வந்த வாக்கிலேயே காணாமல் போகிறார்கள்.

எடுத்துக்காட்டாக 2021 ஐபிஎல் சீசனில் அபாரமாக செயல்பட்ட வெங்கடேஷ் ஐயர், ருதுராஜ் கைக்வாட் ஆகியோர் அடுத்த சில மாதங்களிலேயே இந்தியாவுக்காக அறிமுகமானாலும் சுமாராக செயல்பட்டு தற்போது தூரத்தில் நிற்கிறார்கள். இதற்கு காரணம் என்ன தான் ஐபிஎல் என்பது அதிகப்படியான அழுத்தம் வாய்ந்த உலகத்தரம் வாய்ந்த தொடராக இருந்தாலும் சர்வதேச கிரிக்கெட்டில் தனி மதிப்பும் எக்ஸ்ட்ரா அழுத்தமும் உள்ளது. அது போக ஒரு சீசனில் சிறப்பாக செயல்படும் வீரர்களை தேர்வு செய்து தேர்வுக்குழு எளிதாக அனுப்பி வருகிறது.

- Advertisement -

ஆனால் அவர்கள் சிறப்பாக செயல்படாமல் போகும் பட்சத்தில் பெஞ்சில் அமர வைக்கும் அணி நிர்வாகம் ஆரம்பத்தில் சச்சின் டெண்டுல்கர் தடுமாறுவார் என்ற கண்ணோட்டத்தில் ஏதேனும் சில தரமான வீரர்கள் ஒரு சில போட்டிகளில் சுமாராக செயல்பட்டால் அவர்களுக்கு பதில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறது. அதனாலேயே இந்திய அணியில் சமீப காலங்களாகவே நிலைத்தன்மை இல்லாமல் அடிக்கடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில் இதற்கெல்லாம் முழு முதல் காரணமாக இருக்கும் தேர்வுக்குழுவினர் வரும் காலங்களிலாவது ஒரு வருடத்தை கணக்கில் கொள்ளாமல் 2 – 3 வருடங்கள் தொடர்ந்து சிறப்பாக செயல்படும் வீரர்களை மட்டும் தேர்வு செய்யுமாறு ட்விட்டரில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது பற்றி அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “முதல் ஐபிஎல் சீசன்னில் அசத்தும் வீரர்களை தேர்வு செய்ய வேண்டிய அவசியம் தேர்வு குழுவினருக்கு இல்லை. முதலில் அவர்களை குறைந்தது 2 – 3 ஐபிஎல் மற்றும் உள்ளூர் சீசன்களில் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட விடுங்கள். முழுமையாக தயாராக அவர்களுக்கு தேவையான நேரத்தை கொடுங்கள். ஏனெனில் அதுதான் சமீப காலங்களில் இந்திய அணி தேர்வில் நிலவும் குழப்பத்துக்கான காரணமாகும்”

“மேலும் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு அவ்வளவு எளிதாக விரைவாக யாருக்கும் கிடைத்து விடக்கூடாது. அதை அனைவரும் உழைத்து வாங்க வேண்டும்” என்று கூறியுள்ளார். அவர் கூறுவதும் நியாயம் என்ற நிலைமையில் சேட்டன் சர்மா தலைமையில் வெளியேறிய தேர்வுக்குழுவுக்கு பதிலாக புதிதாக பொறுப்பேற்கும் தேர்வு குழுவாவது இதை பின்பற்றுமா என்று பார்ப்போம்.

Advertisement