ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மாதம் நடைபெறும் 2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக இந்தியா களமிறங்க உள்ளது. கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற உலகக் கோப்பையில் விராட் கோலி தலைமையில் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறிய இந்தியா புதிய கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித் சர்மா தலைமையில் அதன்பின் பங்கேற்ற அத்தனை இருதரப்பு டி20 தொடர்களிலும் தோல்வியடையாமல் வென்று உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறியது. அதனால் மகிழ்ச்சியடைந்த இந்திய ரசிகர்களுக்கு 6 அணிகள் பங்கேற்ற மினி உலகக் கோப்பையை போன்ற 2022 ஆசிய கோப்பையில் நடப்பு சாம்பியனாக களமிறங்கி பைனலுக்கு கூட தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது கவலையை கொடுத்துள்ளது.

ஏனெனில் தரமான வீரர்கள் இருந்தும் அவர்களை சரியாக பயன்படுத்தாமல் தவறான அணி தேர்வு, சுமாரான கேப்டன்ஷிப் போன்ற குளறுபடிகளால் இங்கேயே மண்ணை கவ்விய இந்தியா ஆஸ்திரேலியாவில் எங்கே கோப்பையை வெல்லப் போகிறது என்பதே ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது. இருப்பினும் தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்ற வகையில் ஆசிய கோப்பையில் செய்த தவறுகளை திருத்திக் கொள்வதற்காக அடுத்ததாக சொந்த மண்ணில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்த டி20 தொடர்களில் களமிறங்க இந்தியா தயாராகி வருகிறது.
இறுதிகட்ட சோதனை:
இதில் முதலாவதாக நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி மொகாலியில் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த தொடரில் டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க் உள்ளிட்ட முக்கியமான வீரர்கள் காயம் மற்றும் ஓய்வு காரணமாக இடம் பெறவில்லை என்பதால் சாதாரணமாகவே சொந்த மண்ணில் வலுவான அணியாக திகழும் இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் உலகக் கோப்பைக்கு முன்பாக 100% பலம் பொருந்திய ஆஸ்திரேலிய அணியை இந்த தொடரில் எதிர்கொள்ள முடியாத நிலைமையும் நிலவுகிறது. ஆனாலும் தற்போது சுமாரான பார்மில் தவிக்கும் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பார்முக்கு திரும்ப இந்த தொடர் நல்ல வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக உலக கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணையின் படி சூப்பர் 12 சுற்றில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளை எதிர்கொள்கிறது. அதனால் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள நடப்புச் சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்ளும் வாய்ப்பை பெறவில்லை.
ஆஸ்திரேலியாவை வீழ்த்தனும்:
அதன் காரணமாக சூப்பர் 12 சுற்றில் தேவையான வெற்றிகளைப் பெற்றால் மட்டுமே அரையிறுதி அல்லது பைனல் போன்ற நாக் அவுட் போட்டிகளில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்கு தென்படுகிறது. ஆனால் லீக் அல்லது நாக்-அவுட் என எந்த போட்டியாக இருந்தாலும் இந்தியா உலக கோப்பையை வெல்ல வேண்டுமெனில் முதலில் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 5 உலக கோப்பைகள் உட்பட காலம் காலமாக ஏராளமான வெற்றிகளை பெற்று கிரிக்கெட்டின் முடிசூடா மன்னனாக திகழும் ஆஸ்திரேலியாவை எந்த ஒரு போட்டியிலும் தோற்கடிப்பது கடினமானது என்று சொல்வார்கள்.

அதை 2007, 2011 ஆகிய வருடங்களில் செய்த காரணத்தாலேயே நம்மால் கோப்பையை வெல்ல முடிந்தது என்று தெரிவிக்கும் அவர் இம்முறை நடப்பு சாம்பியனாக இருப்பதால் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்காமல் இந்தியாவால் கோப்பையை தொட முடியாது என்று எச்சரித்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “இதை நான் இதற்கு முன்பும் தெரிவித்துள்ளேன் இப்போதும் தெரிவிக்கிறேன். அதாவது ஆஸ்திரேலியாவை தோற்கடிக்காவிட்டால் இந்தியாவால் டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாது”
இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டில் நான் களமிறங்க நினைக்கும் இடம் அதுதான். அதுதான் எனக்கு கரெக்ட் – சூரியகுமார் யாதவ் கருத்து
“நீங்கள் 2007 டி20 உலகக் கோப்பையை பாருங்கள். நாங்கள் அவர்களை அரையிறுதிப் போட்டியில் தோற்கடித்தோம். 2011 உலகக்கோப்பையில் நாங்கள் அவர்களை காலிறுதிப் போட்டியில் வீழ்த்தினோம். அந்த வகையில் உலகக் கோப்பை போன்ற எந்த ஒரு பெரிய தொடரையும் இந்தியா வெல்ல வேண்டுமானால் முதலில் உலகிலேயே மிகவும் போட்டியான அணியாக கருதப்படும் ஆஸ்திரேலியாவை தோற்கடிக்க வேண்டும்” என்று கூறினார்.



