துலீப் கோப்பை 2024 உள்ளூர் கிரிக்கெட் தொடரின் முதல் ரவுண்டட் விறுவிறுப்பாக துவக்கத்தை பெற்றுள்ளது. அதில் இந்தியா சி மற்றும் இந்தியா டி அணிகள் மோதிய போட்டி செப்டம்பர் 5ஆம் தேதி அனந்தபூரில் துவங்கி நடைபெற்று வருகிறது. அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா சி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா டி அணி சுமாராக விளையாடி 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், தேவ்தூத் படிக்கல், கேஎஸ் பரத் என அந்த அணியின் முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அதனால் 48-6 என தடுமாறிய அந்த அணி 100 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது அபாரமாக விளையாடிய அக்சர் படேல் அதிகபட்சமாக அரை சதமடித்து 86 ரன்கள் குவித்து கை கொடுத்தார்.
விறுவிறுப்பான போட்டி:
இந்தியா சி அணிக்கு அதிகபட்சமாக விஜய்குமார் வைசக் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா சி அணிக்கும் கேப்டன் ருதுராஜ் 5, தமிழக வீரர் சாய் சுதர்சன் 7, ரஜத் படிடார் 13 என முக்கிய பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறினர். அதனால் 43-4 என தடுமாறிய அந்த அணியும் முன்னிலை பெறாது என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் பாபா இந்திரஜித் அரை சதமடித்து 72 ரன்களும் அபிஷேக் போரேல் 34 ரன்களும் குவித்தனர். அதனால் தப்பிய இந்தியா சி அணி 168 ரன்கள் குவித்தது. இந்தியா டி சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின் 4 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் களமிறங்கிய இந்தியா டி அணிக்கு துவக்க வீரர்கள் அதர்வா டைட் 15, யாஷ் துபே 5 ரன்களில் விஜய்குமார் வேகத்தில் அவுட்டானார்கள்.
அதிரடி திட்டம்:
ஆனால் அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சவாலான பிட்ச்சில் மெதுவாக விளையாடினால் வேலையாகாது என்ற திட்டத்தை கையிலெடுத்தார். அதனால் அதிரடியாக விளையாடிய அவர் 9 பவுண்டரி 1 சிக்சருடன் 54 (44) ரன்கலக்கு 122.73 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி போட்டியில் திருப்பு முனையை உண்டாக்கி ஆட்டமிழந்தார். அவருடன் சேர்ந்து விளையாடிய தேவதூத் படிக்கல் தனது பங்கிற்கு 56 (70) ரன்கள் குவித்து அவுட்டானார்.
இதையும் படிங்க: 181 ரன்ஸ்.. அடிக்காமலேயே க்ளீன் போல்ட்டான கில்.. சச்சினின் 33 வருட சாதனையை உடைத்த முஷீர் கான்
அவர்களைத் தொடர்ந்து ரிக்கி புய் நிதானமாக விளையாடி 44 ரன்களில் மாணவ் சுதர் சுழலில் அவுட்டானார். அடுத்து வந்த கேஎஸ் பரத் 16, சரண்ஸ் ஜெயின் 0, அர்ஷ்தீப் சிங் 0 ரன்களில் அடுத்தடுத்து மாணவ் சுதர் சுழலில் சிக்கினர். அதனால் இரண்டாவது நாள் முடிவில் 206-8 ரன்களுடன் 204 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா டி அணிக்கு களத்தில் அக்சர் படேல் 11* ரன்களுடன் உள்ளார். தற்போது நிலைமையில் பிட்ச் பேட்டிங் செய்வதற்கு இன்னும் கடினமாகும் என்பதால் ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணி வெற்றி பெறுவது சிக்கலாகியுள்ளது.



