IND vs ZIM : பாகிஸ்தானின் தனித்துவமான சாதனையை தகர்த்த இந்தியா – புதிய உலக சாதனை

KL Rahul IND Deepak Chahar
- Advertisement -

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. கேஎல் ராகுல் தலைமையில் இளம் வீரர்களுடன் விளையாடி வரும் இந்திய ஆகஸ்ட் 18-ஆம் தேதி துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் அபாரமாக செயல்பட்டு 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி ஆகஸ்ட் 20ஆம் தேதியான நேற்று தலைநகர் ஹராரேயில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே இந்திய பவுலர்களின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் 38.1 ஓவரில் வெறும் 161 ரன்களுக்கு சுருண்டது.

IND vs ZIM Shikhar Dhawan

- Advertisement -

இன்னசென்ட் கயா, சிகந்தர் ராசா, கேப்டன் சகப்வா என நல்ல பார்மில் இருக்கும் நம்பிக்கை நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய அந்த அணிக்கு அதிகபட்சமாக சீன் வில்லியம்ஸ் 42 ரன்களும், ரியன் புர்ள் 39* ரன்களும் குவித்து ஓரளவு காப்பாற்றினார்கள். அசத்தலாக பந்துவீசி இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 162 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் 1 (5) ரன்னில் அவுட்டானாலும் முதல் போட்டியில் எளிதாக வெற்றி பெற வைத்த சிகர் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தலா 33 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தனர்.

எளிதான வெற்றி:
அடுத்த வந்த இசான் கிசான் 6 ரன்னில் அவுட்டானாலும் தீபக் சஹர் 25 ரன்களும் கடைசி வரை அவுட்டாகாமல் 3 பவுண்டரி 4 சிக்சர்களை பறக்கவிட்ட சஞ்சு சாம்சன் 43* (39) ரன்களும் எடுத்து ஃபினிஷிங் கொடுத்தனர். அதனால் 25.4 ஓவரில் 167/5 ரன்களை எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றியைப் பெற்று 2 – 0* (3) என்ற கணக்கில் முன்கூட்டியே இந்த தொடரை கைப்பற்றிய கோப்பையை உறுதி செய்துள்ளது. இந்த வெற்றிக்கு அனைவரும் சிறப்பாக செயல்பட்டாலும் 43* ரன்கள் குவித்த சஞ்சு சாம்சன் முதல் முறையாக ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

Sanju Samson IND VS ZIM

முன்னதாக இந்த தொடரில் கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முதன்மை வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு 2வது தர இளம் இந்திய அணி விளையாடுவதால் முடிந்தளவுக்கு சவால் கொடுத்து தோற்கடிப்போம் என்று ஜிம்பாப்வே தலைமை பயிற்சியாளர் மற்றும் சில வீரர்கள் ஆரம்பத்திலேயே எச்சரித்தனர். ஆனால் அதற்காக பதறாமல் களத்தில் அட்டகாசமாக செயல்பட்ட இந்தியா முதல் போட்டியில் ஜிம்பாப்வேவை 192 ரன்களுக்கு சுருட்டி நேற்றைய போட்டியில் அதைவிட அபாரமாக செயல்பட்டு 161 ரன்களுக்கு சுருட்டி அடுத்தடுத்த பெரிய வெற்றிகளை குவித்து தொடரையும் கைப்பற்றியது.

- Advertisement -

புதிய உலகசாதனை:
அந்த வகையில் வாயில் மட்டும் பேசிய ஜிம்பாப்வே 2வது தர இந்திய அணியை கூட சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களின் ஆதரவுடன் சமாளிக்க முடியாமல் மண்ணை கவ்வி படுதோல்வியை சந்தித்து தொடரை இழந்துள்ளது. அதைவிட ஹராரே மைதானத்தில் பதிவு செய்துள்ள இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட மைதானத்தில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் சாதனையை தகர்த்த இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது.

Harare Sports Club Ground Stadium

கடந்த 2013இல் எம்எஸ் தோனி தலைமையில் இதே ஹராரே மைதானத்தில் இதேபோல் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அபாரமாக செயல்பட்ட இந்தியா 3 – 0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றியை பெற்றது. அதன்பின் 2015இல் இதே மைதானத்தில் அஜிங்கிய ரஹானே தலைமையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 3 – 0 (3) என்ற கணக்கில் ஒயிட்வாஷ் வெற்றி பெற்றது. அதேபோல் கடந்த 2016இல் மீண்டும் எம்எஸ் தோனி தலைமையில் 3 – 0 (3) என வைட்வாஷ் வெற்றி பெற்ற இந்தியா தற்போது ராகுல் தலைமையில் 2 – 0* என முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

இப்படி 2013 முதல் 2022* வரை ஹராரே மைதானத்தில் தொடர்ச்சியாக 11 வெற்றிகளை பதிவு செய்துள்ள இந்திய இந்த தனித்துவமான உலக சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன் 1990களில் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் 10 தொடர் வெற்றிகளை பதிவு செய்திருந்ததே முந்தைய சாதனையாக இருந்தது. அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் காபா மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் 1992 – 2001 வரை 9 தொடர் வெற்றிகளை பதிவு செய்துள்ளது.

இதையும் படிங்க : IND vs ZIM : சச்சினையே தூங்கவிடாமல் கஷ்டப்படுத்திய பவுலர் அவர்தான் – அஜய் ஜடேஜா பகிர்ந்த சுவாரசிய தகவல்

இதுபோக கடைசியாக சந்தித்த 7 ஒருநாள் போட்டிகளில் ஜிம்பாப்வேவை இந்தியா ஆல்-அவுட் செய்துள்ளது. உலகின் இதர அணிகளை காட்டிலும் ஜிம்பாப்வேவுக்கு எதிராக முதல் முறையாக தொடர்ச்சியாக அதிக போட்டிகளில் இந்தியா ஆல் அவுட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement