வங்கதேசத்துக்கு எதிராக கான்பூரில் இந்தியா இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி வருகிறது. செப்டம்பர் 27ஆம் தேதி துவங்கிய அப்போட்டியின் முதல் நாளில் வங்கதேசம் 107-3 ரன்கள் எடுத்திருந்த போது மழை வந்தது. அடுத்த 2 நாட்களும் மழையால் போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று நான்காவது நாள் ஆட்டம் துவங்கியது.
அதில் தொடர்ந்து விளையாடிய வங்கதேசம் முடிந்தளவுக்கு போராடியும் 233 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக மோனிமுல் ஹைக் அற்புதமான சதமடித்து 107* ரன்கள் குவித்தார். ஆனால் எதிர்புறம் நஜ்முல் சாண்டோ 31, லிட்டன் தாஸ் 13, மெஹதி ஹசன் 20 என மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள்.
இந்தியாவின் அதிரடி:
இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 3, சிராஜ் 2, அஸ்வின் 2, ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் அதிரடியாக விளையாடினார். குறிப்பாக ஒன்றரை நாட்கள் மட்டுமே மீதம் இருப்பதால் வெற்றியை பெறும் முனைப்புடன் அவர்கள் அதிரடியாக ரன்கள் குவித்தனர்.
அதில் கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை கொண்டாட வைத்தார். அவர்களுடைய அதிரடியால் வெறும் 3 ஓவரில் 18 பந்துகளில் இந்தியா 50 ரன்கள் கடந்தது. இதன் வாயிலாக 147 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிவேகமாக 50 ரன்கள் குவித்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை இந்தியா படைத்துள்ளது.
தூளான பஸ்பால் சாதனை:
இதற்கு முன் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நாட்டிங்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து 4.2 ஓவர்களில் 50 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். இங்கிலாந்து பஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி டி20 போல விளையாடி படைத்த அந்த சாதனையை இன்று தூளாக்கிய இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஓவரில் 50 ரன்கள் குவித்த முதல் அணி என்ற வரலாறு காணாத சாதனையும் நிகழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரமாண்டமான உலக சாதனையை நிகழ்த்தி அசத்திய – ரோஹித் சர்மா ஜெய்ஸ்வால் ஜோடி
அதற்கு உதவிய ரோகித் சர்மா ஒரு பவுண்டரி 3 சிக்ஸருடன் 23 (11) ரன்கள் குவித்து அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடும் ஜெய்ஸ்வால் 31 பந்துகளில் 50 ரன்கள் கடந்துள்ளார். அவருடைய ஆட்டத்தால் 10.1 ஓவரில் 100-1 ரன்கள் குவித்த இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 100 ரன்கள் அடித்த அணி என்ற தங்களது சொந்த சாதனையை உடைத்து புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் 2023இல் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயினில் 12.2 ஓவரில் இந்தியா 100 ரன்கள் அடித்ததே முந்தைய சாதனை.



