3வது ஜிம்பாப்வே போட்டியில் வென்று.. சத்தமின்றி புதிய உலக சாதனையை நிகழ்த்திய இந்தியா

Team India
- Advertisement -

ஜிம்பாப்வே நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரில் ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வென்ற பெரும்பாலான சீனியர் இந்திய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. எனவே சுப்மன் கில் தலைமையில் ஐபிஎல் 2024 தொடரில் அசத்திய இளம் வீரர்களுடன் இந்தியா அந்த தொடரில் விளையாடி வருகிறது.

அந்தத் சூழ்நிலையில் அத்தொடரின் முதல் போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற ஜிம்பாப்வே உலக சாம்பியனான இந்தியாவை தோற்கடித்து அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. ஆனால் 2வது போட்டியில் சொல்லி அடித்த இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை தோற்கடித்து தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்து தொடரை சமன் செய்தது.

- Advertisement -

இந்தியாவின் உலக சாதனை:
அதே வேகத்தில் ஜூலை 10ஆம் தேதி நடைபெற்ற 3வது போட்டியிலும் 23 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கேப்டன் கில் 66, ருதுராஜ் கெய்க்வாட் 49 ரன்கள் எடுத்த உதவியுடன் 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆனால் அதைத் துரத்திய ஜிம்பாப்வே முடிந்தளவுக்கு போராடியும் 20 ஓவரில் 159/6 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

அதிகபட்சமாக டியோன் மேயர்ஸ் 65* ரன்கள் எடுத்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் எடுத்த தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகன் விருது வென்றார். அதனால் 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள இந்தியா இத்தொடரை வெல்வதற்கான வாய்ப்பை அதிகரித்துள்ளது. முன்னதாக 3வது போட்டியில் பெற்ற வெற்றியுடன் சேர்த்து இந்தியா சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 150வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

- Advertisement -

இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளை பெற்ற முதல் அணி என்ற உலக சாதனையை இந்தியா சத்தமின்றி செய்துள்ளது. கடந்த 2006 முதல் டி20 கிரிக்கெட்டில் விளையாடும் இந்தியா இதுவரை 230 போட்டிகளில் விளையாடியுள்ளது. அதில் 2007, 2024 டி20 உலகக் கோப்பைகளை வென்று மொத்தம் 150 வெற்றிகளை 65.21% என்ற விகிதத்தில் பெற்றுள்ள இந்தியா 69 தோல்விகளை சந்தித்தது. 6 போட்டி மழையால் கைவிடப்பட்டது. 5 போட்டி சமனில் முடிந்தது.

இதையும் படிங்க: ராகுல் டிராவிடை விட அதிக சம்பளம்.. அதுமட்டுமின்றி கிடைக்கப்போகும் பல்வேறு சலுகைகள் – கம்பீருக்கு அடித்த அதிர்ஷ்டம்

இந்தியாவுக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் 142 வெற்றிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. அதேப் பட்டியலில் நியூசிலாந்து அணி 111 வெற்றிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. இதைத்தொடர்ந்து இத்தொடரின் 4வது போட்டி ஜூலை 13ஆம் தேதி நடைபெறுகிறது. அதிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்புடன் இந்தியா தயாராகி வருகிறது.

Advertisement