சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு பரிதாப சாதனையை பார்சல் செய்த – ஷ்ரேயாஸ் ஐயர்

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் ஏமாற்ற தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக நியூசிலாந்துக்கு பயணித்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் ஓய்வெடுக்கும் இத்தொடரில் பாண்டியா தலைமையிலான இளம் இந்திய அணி களமிறங்கியுள்ள நிலையில் முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. அதை தொடர்ந்து மௌன்ட் மௌங்கனி நகரில் நவம்பர் 20ஆம் தேதியன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 20 ஓவர்களில் 191/6 ரன்கள் சேர்த்தது.

தொடக்க வீரர்கள் ரிஷப் பண்ட் 6, இஷன் கிசான் 36, கேப்டன் ஹர்டிக் பாண்டியா 13 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய இந்திய அணிக்கு அதிகபட்சமாக களமிறங்கிய முதல் பந்திலிருந்தே வழக்கம் போல சரவெடியாக செயல்பட்ட சூரியகுமார் யாதவ் 11 பவுண்டரி 7 சிக்ஸருடன் சதமடித்து 111* (51) ரன்கள் விளாசி காப்பாற்றினார். நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக கடைசி நேரத்தில் ஹாட்ரிக் எடுத்த டிம் சவுத்தி 3 விக்கெட்களை எடுத்தார். அதைத்தொடர்ந்து 192 ரன்களை துரத்திய நியூசிலாந்து முதல் ஓவரிலிருந்தே தரமாக பந்து வீசிய இந்திய பவுலர்களுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து 18.5 ஓவரில் 126 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

இப்படியா அவுட்டாவிங்க:

டேவோன் கான்வே 25, ஃபின் ஆலன் 0, கிளென் பிலிப்ஸ் 12 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக நங்கூரமாக நின்று போராடிய கேப்டன் கேன் வில்லியம்சன் 4 பவுண்டர் 2 சிக்ஸருடன் 61 (52) ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக தீபக் ஹூடா 4 விக்கெட்களை எடுத்தார். அதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை சுவைத்த இந்தியா 1 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது. இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி தனி ஒருவனாக பேட்டிங்கில் மிரட்டிய சூரியகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னதாக இப்போட்டியில் ரிஷப் பண்ட் – இஷான் கிசான் ஆகிய தொடக்க வீரர்கள் அதிரடியான தொடக்கத்தை கொடுக்க தவறிய நிலையில் நம்பிக்கை நாயகன் சூரியகுமார் வழக்கம் போல அதிரடி காட்டினார். இருப்பினும் 4வது இடத்தில் களமிறங்கி அவருக்கு கை கொடுக்க வேண்டிய ஸ்ரேயாஸ் ஐயர் 1 பவுண்டரி 1 சிக்ஸருடன் அதிரடி காட்ட நினைத்து லாக்கி பெர்குசன் வீசிய 13வது ஓவரின் 4வது பந்தில் பின்னங்காலில் ஆட முயற்சித்தார். ஆனால் அதற்காக அதிகமாக பின்னோக்கி சென்ற அவரது வலது கால் ஸ்டம்ப்பில் பட்டதால் பெய்ல்ஸ் கீழே விழுந்தது.

- Advertisement -

அதன் காரணமாக ஹிட் விக்கெட் முறையில் தன்னைத்தானே அவுட் செய்து கொண்ட அவர் 13 (9) ரன்களில் ஆட்டமிழந்து பரிதாபமாக சென்றார். திறமையான இளம் வீரராக அறியப்படும் அவர் பொதுவாகவே சுழல் பந்து வீச்சை அடித்து நொறுக்குவதும் உயரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளில் வலையில் சிக்கி எலியை போல் அவுட்டாவதும் உலகமே அறிந்ததாகும். இருப்பினும் இளம் வீரர்களுக்கான வாய்ப்பாக கருதப்படும் இந்த தொடரில் வாய்ப்பு பெற்ற அவர் அவுட்டான விதத்தை பார்த்து இப்படியா அவுட்டாவிங்க என்று ரசிகர்கள் கிண்டலடிக்கிறார்கள்.

ஏனெனில் ஸ்டம்பில் மோதமால் சமநிலையுடன் விளையாடுவதே ஒரு பேட்ஸ்மேனின் அடிப்படையாகும். அதை கடைபிடிக்க தவறிய அவரை போலவே நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அதிரடியாக 63 (33) ரன்களைக் குவித்து இந்தியாவை ஓரளவு காப்பாற்றிய ஹர்திக் பாண்டியா கடைசி பந்தில் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்க : IND vs NZ : எக்ஸ்ட்ராவா 10 ரன் கெடச்சும் இப்படியா ஆடுவீங்க. இந்திய ஓப்பனர்கள் மீது – எழுந்த குற்றச்சாட்டு

தற்போது அதற்கடுத்த இந்த போட்டியில் இவர் ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்ததால் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக அடுத்தடுத்த போட்டிகளில் ஹிட் விக்கெட்டை பதிவு செய்த முதல் அணி பரிதாபமான பெயர் இந்தியாவுக்கு வந்து சேர்ந்துள்ளது. இதற்கு முன் உலகின் வேறு எந்த அணியும் இதுபோல அடுத்தடுத்த போட்டிகளில் ஹிட் விக்கெட்டை பதிவு செய்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement