ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியா அங்கு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று வருகிறது. கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள இந்த தொடரில் கேஎல் ராகுல் தலைமையில் இளம் வீரருடன் களமிறங்கிய இந்தியா ஆகஸ்ட் 18-ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்று 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் ஆகஸ்ட் 20ஆம் தேதியான இன்று இந்திய நேரப்படி மதியம் 12.45 மணிக்கு துவங்கிய வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதை தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வேவுக்கு தொடக்க வீரர் கைடானோ 8 (32) ரன்களில் சிராஜ் பந்தில் ஆட்டமிழக்க அடுத்த சில ஓவர்களில் மற்றொரு தொடக்க வீரர் இன்னசென்ட் கயா 16 (25) கேப்டன் சகப்வா 2 (5) என முக்கிய பேட்ஸ்மேன்க்ள் சொற்ப ரன்களில் ஷர்துல் தாகூர் வீசிய ஒரே ஓவரில் அடுத்தடுத்து அவுட்டாகி சென்றனர். அடுத்த ஓவரிலேயே அடுத்து களமிறங்கிய மாதவரே 2 (12) ரன்களில் அவுட்டானதால் மேலும் சரிந்த அந்த அணி 31/4 என்ற மோசமான தொடக்கத்தைப் பெற்றது.
சுருண்ட ஜிம்பாப்வே:
அந்த நிலைமையில் அடுத்ததாக களமிறங்கி 5-வது விக்கெட்டுக்கு 41 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து தங்களது அணியை மீட்டெடுக்க போராடிய முக்கிய வீரர் சிகந்தர் ராசா 16 (31) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 42 (42) ரன்கள் குவித்து முடிந்தளவுக்கு போராடிய சீன் வில்லியம்ஸ் இந்தியாவின் சுழலில் சிக்கி அவுட்டானார். அதனால் 150 ரன்களை தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட அந்த அணிக்கு அடுத்து களமிறங்கிய ரியான புர்ள் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 39* (47) ரன்கள் எடுத்து போராடினாலும் எதிர்ப்புறம் வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டானார்கள்.
அதனால் 38.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஜிம்பாப்வே வெறும் 161 ரன்களுக்கு மீண்டும் ஆல்-அவுட்டானது. அசத்தலாக பந்துவீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்து 162 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு இம்முறை தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் 1 (5) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தார். இருப்பினும் அனுபவத்தை காட்டிய மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவான் அதிரடியாக 4 பவுண்டரியை பறக்கவிட்டு 33 (31) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த இஷான் கிஷன் 6 (13) ரன்களில் நடையை கட்டினார்.
போராடி வெற்றி:
அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் விளையாடிக் கொண்டிருந்த சுப்மன் கில் 6 பவுண்டரியுடன் 33 (34) ரன்களில் அவுட்டானார். அதனால் 97/4 என தடுமாறிய இந்தியாவுக்கு மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன் – தீபக் ஹூடா ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5-வது விக்கெட்டுக்கு பொறுப்பான 56 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த போது தீபக் ஹூடா 3 பவுண்டரியுடன் 25 (36) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் கிடைத்த வாய்ப்பை பொன்னாக மாற்றிய சஞ்சு சாம்சன் கடைசி நேரத்தில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 3 பவுண்டரிகளையும் 4 மெகா சிக்சர்களையும் பறக்க விட்டு 43* (29) ரன்களை விளாசி சிக்சருடன் சூப்பரான பினிஷிங் கொடுத்தார்.
அதனால் 25.4 ஓவரிலேயே 167/5 ரன்களை எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் இம்முறை சற்று போராடி வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் படுதோல்வியை சந்தித்த ஜிம்பாப்வே இத்தொடரை கைப்பற்றுவதற்காக வென்றே தீரவேண்டும் என்ற சூழ்நிலையில் களமிறங்கிய இந்த வாழ்வா – சாவா போட்டியில் பேட்டிங்கில் மீண்டும் இந்தியாவின் தரமான பந்துவீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் முதல் போட்டியை விட மோசமாக செயல்பட்டு வெறும் 161 ரன்களுக்கு சுருண்ட போதே மீண்டும் தோல்வி உறுதியாகிவிட்டது.
இருப்பினும் பந்துவீச்சில் இம்முறை மிகச் சிறப்பாக செயல்பட்டு கேஎல் ராகுல் போன்ற வீரர்களை ஆரம்பத்திலேயே அவுட் செய்த அந்த அணி 8 வெவ்வேறு பவுலர்களை களமிறக்கி வெற்றிக்காக முடிந்த அளவுக்கு போராடியது. ஆனால் 2வது தர அணியாக இருந்தாலும் சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா போன்ற உலகத்தரம் வாய்ந்த இளம் வீரர்களை கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் தலைகுனியும் தோல்வியை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க: ஆசிய கோப்பையிலிருந்து வெளியேறிய ஸ்டார் பாக் பவுலர் – இந்தியா தப்பித்ததாக கலாய்க்கும் பாக் ரசிகர்கள்
மறுபுறம் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்டு பேட்டிங்கில் மிடில் ஆர்டரில் ஏற்பட்ட சோதனையில் சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா ஆகியோரை வைத்து வெற்றி கண்ட இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் ரோகித் சர்மா போன்ற முதன்மை வீரர்கள் இல்லாத போதிலும் இந்த தொடரை கைப்பற்றி உலகத்தரம் வாய்ந்த அணி என்று மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது.



