IND vs WI : சவாலான மைதானத்தில் ஜோடியாக சீறிப்பாய்ந்த கில் – ஜெய்ஸ்வால், வெ.இ அணியை துவைத்து இந்தியா வென்றது எப்படி?

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா முக்கியமான 3வது போட்டியில் வென்று தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. ஆனாலும் இத்தொடரை வெல்ல எஞ்சிய போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா இருக்கும் நிலையில் ஆகஸ்ட் 12ஆம் தேதி அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் நடைபெற்ற முக்கியமான 4வது போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 17 (7) ரன்களை விளாசி அதிரடி காட்டிய கெய்ல் மேயர்ஸை அவுட்டாக்கிய அர்ஷிதீப் சிங் அடுத்த சில ஓவர்களில் மறுபுறம் தடுமாறிய ப்ரண்டன் கிங்கையும் 18 (16) ரன்களில் அவுட்டாக்கினார். அதை விட அடுத்ததாக வந்த நிக்கோலஸ் பூரான் 1 (3) கேப்டன் ரோவ்மன் போவல் 1 (3) என 2 முக்கிய காட்டடி பேட்ஸ்மேன்களை குல்தீப் யாதவ் 6வது ஓவரில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கியதால் 57/4 என வெஸ்ட் இண்டீஸ் தடுமாறியது.

- Advertisement -

அதிரடி ஜோடி:
அந்த நிலைமையில் அடுத்து வந்த ஹெட்மயருடன் ஜோடி சேர்ந்து மறுபுறம் நங்கூரமாக விளையாடிய சாய் ஹோப் 5வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த ஷாய் ஹோப் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 45 (29) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த செஃபார்ட் 9 ரன்களிலும் ஜேசன் ஹோல்டர் 3 ரன்களில் அவுட்டான போதிலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய ஹெட்மையர் டெத் ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 61 (39) ரன்கள் விளாசி நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்.

அதனால் 20 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் 178/8 ரன்கள் குவித்த நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 179 என்ற கடினமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு யசஸ்வி ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி விரைவாக ரன்களை சேர்த்தனர். அதில் கடந்த போட்டியில் அறிமுகமாகி 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த ஜெய்ஸ்வால் இம்முறை அதற்கும் சேர்த்து வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டார்.

- Advertisement -

மறுபுறம் தற்சமயத்தில் உச்சகட்ட ஃபார்மில் இருந்தும் இந்த சுற்றுப்பயணம் முழுவதுமே சுமாராக செயல்பட்டு கிண்டல்களுக்குள்ளான சுப்மன் கில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிரடியாக விளையாடினார். அப்படி 2 இளம் தொடக்க வீரர்கள் ஜோடி சேர்ந்து ஒவ்வொரு ஓவருக்கும் 10 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு அட்டகாசமான துவக்கத்தை கொடுத்தனர். குறிப்பாக வலது மற்றும் இடது கை கலவையாக இருப்பதால் விரைவில் பிரிக்க முடியாமல் தடுமாறிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்ட இந்த ஜோடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அவுட்டாகாமல் அடப்பிடித்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தது.

அதே வேகத்தில் வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் போதும் என்று சொல்லும் அளவுக்கு நேரம் செல்ல செல்ல மைதானத்தின் அனைத்து திசைகளிலும் அடித்து நொறுக்கிய இந்த ஜோடி 15.3 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 165 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த போது சுப்மன் கில் 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 77 (47) ரன்களில் ஆட்டமிழந்தார். அவருடன் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் 11 பவுண்டரி 3 சிக்ஸருடன் 84* (51) ரன்கள் எடுத்ததால் 17 ஓவரிலேயே 179/1 ரன்களை எடுத்த இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முன்னதாக வாழ்வா சாவா என்ற கடந்த போட்டியில் காப்பாற்றிய சூரியகுமார் இம்முறையும் 179 ரன்களை துரத்தும் போது அதிரடியாக விளையாட வேண்டிய நிலைமை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் இப்போட்டி நடைபெறும் மைதானத்தில் வரலாற்றில் 2 முறை மட்டுமே சேசிங் செய்த அணிகள் வெற்றி பெற்றது இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சூர்யகுமார் ரெஸ்ட் எடுக்கட்டும் நாங்களே பார்த்துகிறோம் என்ற வகையில் வெளுத்து வாங்கிய இளம் ஓப்பனிங் ஜோடி இந்தியாவுக்கு எளிதான வெற்றியைப் பெற்றுக் கொடுத்து 2 – 2* (5) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்து வெஸ்ட் இண்டீஸ்க்கு பதிலடியும் கொடுத்து நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க உதவியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement