
இங்கிலாந்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் விளையாடும் உலக சாம்பியன்ஷிப் லீக் 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் ஜூலை 29ஆம் தேதி லீசெஸ்டர் நகரில் 15வது லீக் போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் இந்தியா சாம்பியன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் வென்றால் மட்டுமே செமி ஃபைனலுக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது.
அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற இந்தியா சாம்பியன்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் 144/9 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு கேப்டன் லெண்டில் சிம்மன்ஸ் 2, கேப்டன் கிறிஸ் கெய்ல் 9, ட்வயன் ஸ்மித் 20, வால்டன் 0, ட்வயன் ப்ராவோ 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.
அதனால் 43/5 என தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆடரில் கைரன் பொல்லார்ட் தம்முடைய ஸ்டைலில் வெளுத்து வாங்கினார். ஆனாலும் எதிர்புறம் நர்ஸ் 8, முகமத் 0, மில்லர் 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். இருப்பினும் மறுபுறம் சரவெடியாக விளையாடி போராடிய பொல்லார்ட் 3 பவுண்டரி 8 சிக்ஸருடன் 74* (43) ரன்கள் குவித்தார்.
இந்தியா சாம்பியன்ஸ் அணி அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா 3, ஸ்டுவர்ட் பின்னி 2, வருண் ஆரோன் 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்ததாக விளையாடிய இந்தியா 14.1 ஓவரில் 145 ரன்களை எடுத்தால் மட்டுமே செமி ஃபைனலுக்கு செல்ல முடியும் என்ற நிலையில் களமிறங்கியது. அந்த நிலையில் ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா தடுமாற்றமாக விளையாடிய 8 (7) ரன்னில் விக்கெட்டை இழந்தார்.
மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேன் ஷிகர் தவான் அதிரடியாக பேட்டிங் செய்ய முயற்சித்து 25 (18) ரன்கள் எடுத்து அவுட்டானார். அடுத்ததாக வந்த குர்கீரத் சிங் 7 (8), சுரேஷ் ரெய்னா 7 (9) ரன்களில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர். இருப்பினும் மிடில் ஆர்டரில் ஸ்டுவர்ட் பின்னி அதிரடியாக விளையாடி வேகமாக ரன்கள் சேர்த்தார். அவருடன் எதிர்ப்புறம் அதிரடி காட்டிய கேப்டன் யுவராஜ் சிங் முக்கியமான 21 (11) ரன்கள் அடித்து விக்கெட்டை இழந்தார்.
அடுத்து வந்த யூசுப் பதான் வெறும் 7 பந்தில் 1 பவுண்டரி 2 சிக்ஸருடன் 21* ரன்களை விளாசி சூப்பர் ஃபினிசிங் கொடுத்தார். இறுதியில் பின்னி 50* (21) ரன்களை எடுத்த உதவியுடன் 13.2 ஓவரிலேயே 148/5 ரன்களை அடித்த இந்தியா 5 வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் வெறும் 1 வெற்றியுடன் ரன்ரேட் அடிப்படையில் 4வது அணியாக செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது.
இதையும் படிங்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்தி வரும் கே.எல் ராகுலுக்கு பி.சி.சி.ஐ வழங்கவுள்ள வெகுமதி – விவரம் இதோ
குறிப்பாக 3 புள்ளிகளை பெற்ற இங்கிலாந்தைக் (-0.809) காட்டிலும் நல்ல ரன்ரேட்டை (-0.558) கொண்டிருப்பதால் இந்தியா செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. இதைத்தொடர்ந்து செமி ஃபைனல் சுற்றில் இந்தியா 9 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தானை ஜூலை 31ஆம் தேதி எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.