இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததால் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார். அதேவேளையில் ரோகித் சர்மாவின் துவக்க வீரருக்கான இடமானது அனுபவ வீரரான கே.எல் ராகுலுக்கு வழங்கப்பட்டது. அந்த வாய்ப்பினை கெட்டியாக பிடித்துள்ள கே.எல் ராகுல் தனது மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி துவக்க வீரருக்கான இடத்தினை நிரந்தரமாக கைப்பற்றியுள்ளார்.
கே.எல் ராகுலுக்கு கிடைக்கவுள்ள வெகுமதி :
இதன் காரணமாக அடுத்த சில ஆண்டுகளுக்கு அவரே இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரராகவும் செயல்பட இருக்கிறார் என்று தெரிகிறது. இங்கிலாந்து அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் கே.எல் ராகுல் இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளில் 63 ரன்கள் சராசரியுடன், இரண்டு சதங்கள் உட்பட 511 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்களை குவித்த வீரராக இரண்டாவது இடத்தில் உள்ளார்.
அதிலும் குறிப்பாக அண்மையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஓல்டு டிராபோர்டு மைதானத்தில் நடைபெற்று முடிந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணி அந்த போட்டியை டிரா செய்ய கே.எல் ராகுல் அளித்த பங்களிப்பு பலருக்கு மத்தியிலும் பாராட்டுக்களை பெற்றிருந்தது. ஏனெனில் அந்த போட்டியின் போது இரண்டாவது இன்னிங்சில் 230 பந்துகளை எதிர்கொண்ட அவர் 90 ரன்கள் சேர்த்து இந்திய அணியை பலமான நிலைக்கு அழைத்துச் சென்றார்.
இந்த தொடரில் துவக்க வீரராக மிகச்சிறப்பான ஃபார்மை வெளிப்படுத்தியுள்ள அவருக்கு தற்போது இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ ஒரு சிறப்பு வெகுமதி அளிக்க இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர இடத்தினை பிடித்து விளையாடி வரும் அவருக்கு டி20 போட்டிகளிலும் வாய்ப்பளிக்க இருப்பதாக தெரிகிறது.
கடைசியாக கடந்த 2022-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியின் போது இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடியிருந்த அவர் கடந்த மூன்று ஆண்டுகளாகவே டி20 ஃபார்மேட்டில் இடம்பெறாமல் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க : சுனில் கவாஸ்கரின் இரட்டை சாதனையை முறியடிக்கும் வாய்ப்பில் கேப்டன் சுப்மன் கில் – விவரம் இதோ
ஆனால் தற்போது இந்திய அணியின் அனுபவ வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி போன்றோர் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் மீண்டும் கே.எல். ராகுலுக்கு டி20 போட்டிகளில் மிடில் ஆர்டரில் வாய்ப்பு கொடுக்க உள்ளதாக தெரிகிறது. இதன் காரணமாக எதிர்வரும் ஆசிய கோப்பை இந்திய டி20 அணியில் கே.எல் ராகுலுக்கு இடம் வழங்க பி.சி.சி.ஐ முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.



