ஐசிசி 2026 அண்டர்-19 உலகக் கோப்பை நமீபியா மற்றும் வங்கதேசத்தில் ஜனவரி 15ஆம் தேதி கோலாகலமாக துவங்கியது. அத்தொடரில் குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் இந்திய கிரிக்கெட் அணி தங்களது முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொண்டது. அப்போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.00 மணிக்கு ஜிம்பாப்வேவில் இருக்கும் புலவாயோ மைதானத்தில் துவங்கி நடைபெற்றது.
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய அமெரிக்கா அணி இந்திய பவுலர்களின் தரமான பந்து வீச்சில் ரன்கள் குவிக்கத் தடுமாறியது. அந்த வகையில் கடைசி வரை தடுமாறிய அந்த அணி 35.2 ஓவரில் 107 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இந்தியா அசத்தல்:
அந்த அணிக்கு அர்மிந்தர் கில் 1, கேப்டன் உட்கர்ஸ் ஸ்ரீவஸ்தவா 0, அமௌங்க் ஆரேபள்ளி 3 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள். அதிகபட்சமாக சகில் கார்க் 16, அர்ஜுன் மகேஷ் 16, அட்நித் ஜாம்ப் 18, நிதிஸ் சுடினி 36 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணிக்கு அதிகபட்சமாக வேகப்பந்து வீச்சாளர் ஹெனில் பட்டேல் 7 ஓவரில் 1 மெய்டன் உட்பட 16 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்து மிரட்டினார்.
அவருடன் தீபேஸ் திவேந்திரன், ஆர்எஸ் அம்ப்ரிஷ், கிளன் பட்டேல், வைபவ் சூரியவன்சி தலா 1 விக்கெட் எடுத்து அசத்தினர். அடுத்ததாக இந்திய அணி பேட்டிங்கை துவங்கிய போது வந்த மழை சிறிது நேரம் தாமதப்படுத்தியது. அதன் பின் மீண்டும் துவங்கிய ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற 37 ஓவரில் 96 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இளம் இந்தியா வெற்றி
அதைத் துரத்திய இந்திய அண்டர்-19 அணிக்கு வைபவ் சூர்யவன்சி 1, வேதாந்த் திரிவேதி 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதே போல கேப்டன் ஆயுஸ் மாத்ரே 19, விஹான் மால்கோத்ராவும் 18 ரன்களில் பின்னடைவை ஏற்படுத்தினார். இருப்பினும் மிடில் ஆர்டரில் பொறுப்புடன் விளையாடிய அபிஞான் குண்டு 42* (41) ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க: கடைசி போட்டியில் 70 ரன்கள் அடித்தால் சுப்மன் கில் நிகழ்த்தப்போகும் மாபெரும் சாதனை – விவரம் இதோ
அவருடன் கனிஷ்க் சௌஹான் 10* (14) ரன்கள் எடுத்ததால் 17. 2 ஓவரிலேயே 99/4 ரன்களை குவித்த இந்திய அண்டர்-19 அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதனால் 2 புள்ளிகளைப் பெற்ற இந்திய அணி 2026 அண்டர்-19 உலகக் கோப்பையை வெற்றிகரமாகத் துவங்கியுள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஹெனில் பட்டேல் ஆட்டநாயகன் விருது வென்றார். இதைத் தொடர்ந்து இந்தியா தங்களது அடுத்தப் போட்டியில் வங்கதேசத்தை ஜனவரி 17ஆம் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.



