
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் செப்டம்பர் 10ஆம் தேதி குரூப் ஏ பிரிவில் இடம் வகிக்கும் நடப்புச் சாம்பியன் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய அமீரக அணிக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த அலிசான் சராப்பு 22 (17) ரன்னில் ஜஸ்ப்ரித் பும்ரா வேகத்தில் கிளீன் போல்டானார். அடுத்து வந்த முகமது சோஹைப்பை 2 ரன்னில் குல்தீப் யாதவ் காலி செய்தார். அதோடு நிற்காத குல்தீப் 9வது ஓவரின் 1, 4, 6வது பந்துகளில் முறையே கேப்டன் முகமது வாசிம் 19, ராகுல் சோப்ரா 3, ஹர்ஷித் கௌசிக்கை 2 ரன்களில் அவுட்டாக்கி தெறிக்க விட்டார்.
அதனால் 50/5 என ஆரம்பத்திலேயே சரிந்த அமீரக அணிக்கு அடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் பெவிலியன் திரும்பினர். இறுதியில் 13.1 ஓவரில் 57 ரன்களுக்கு ஆல் அவுட்டான அமீரகம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து அணி என்ற மோசமான உலக சாதனை படைத்தது.
இதற்கு முன் 2023 அகமதாபாத் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக நியூஸிலாந்து 66க்கு அவுட்டானதே முந்தைய சாதனை. அந்தளவுக்கு பந்து வீச்சில் மிரட்டிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக சிவம் துபே 3 குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் எடுத்தார்கள். அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா – சுப்மன் கில் ஆரம்பத்திலேயே அதிரடியாக பேட்டிங் செய்தனர்.
3.5 ஓவரில் 48 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா 2 பவுண்டரி 3 சிக்ஸருடன் 30 (16) ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த கேப்டன் சூர்யகுமார் 7* (2) ரன்களும் மறுபுறம் அதிரடி காட்டிய கில் 20* (9) ரன்களும் எடுத்தனர். அதனால் 4.3 ஓவரிலேயே 60/1 ரன்களை எடுத்த இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றறு ஆசியக் கோப்பையை வெற்றிகரமாக துவக்கியுள்ளது.
இதையும் படிங்க: 50/5 டூ 57க்கு ஆல் அவுட்.. தெறிக்க விட்ட நம்பர் ஒன் இந்தியாவுக்கு எதிராக.. அமீரகம் மோசமான உலக சாதனை
மேலும் டி20 கிரிக்கெட்டில் இந்தியா தங்களுடைய இலக்கை வேகமாக சேசிங் செய்து சாதனை வெற்றி பெற்றுள்ளது. இதற்கு முன் 2021 டி20 உலகக் கோப்பையில் இதே துபாயில் ஸ்காட்லாந்துக்கு எதிராக 6.3 ஓவரில் இலக்கை எட்டியதே இந்தியாவின் முந்தைய வேகமான வெற்றி. அத்துடன் 93 பந்துகள் மீதம் வைத்த வென்ற இந்தியா டி20 கிரிக்கெட்டில் பந்துகள் அடிப்படையில் தங்களுடைய மிகப்பெரிய சாதனை வெற்றியை பெற்ற ஆசிய அணி என்ற சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன் 2014 சட்டோகிராம் போட்டியில் நெதர்லாந்துக்கு எதிராக இலங்கை 90 பந்துகள் மீதம் வைத்து வென்றதே முந்தைய சாதனை.