ஐசிசி 2025 மகளிர் உலகக் கோப்பையை சொந்த மண்ணில் முதல் முறையாக வென்ற இந்திய கிரிக்கெட் அணி புதிய சரித்திரம் படைத்தது. இதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிராக இந்தியா தங்களது சொந்த மண்ணில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 21ஆம் தேதி இரவு 7.00 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.
அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய இலங்கை தடுமாற்றமாக பேட்டிங் செய்து 20 ஓவரில் போராடி 121/6 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக விஸ்மி குணரத்னே 39, ஹாசினி பெரேரா 20, ஹர்ஷிதா மாதவி 21, கேப்டன் சமாரி அட்டப்பட்டு 15 ரன்கள் எடுத்தார்கள்.
மந்தனா உலக சாதனை:
இந்திய அணிக்கு அதிகபட்சமாக கிராந்தி கௌட், தீப்தி சர்மா, ஸ்ரீ சரணி தலா 1 ஒரு விக்கெட் சாய்த்தனர். எஞ்சிய 3 விக்கெட்டுகளை ரன் அவுட்டாக எடுத்து ஃபீல்டிங்கில் அசத்திய இந்தியா 4 கேட்ச்களையும் கோட்டை விட்டது. அடுத்ததாக 122 ரன்கள் இலக்கைத் துரத்திய இந்திய அணிக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த ஷபாலி வர்மா 9 (5) ரன்களில் காவ்யா கவிண்டி வேகத்தில் அவுட்டானார்.
அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிகோஸ் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்புறம் நிதானமாக விளையாடிய ஸ்மிருதி மந்தனா 25 (25) ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். இதையும் சேர்த்து சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அவர் 153 போட்டிகளில் 4000 ரன்கள் கடந்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் குவித்த 2வது வீராங்கனை என்ற உலக சாதனையை மந்தனா படைத்துள்ளார்.
இந்தியா வெற்றி:
இதற்கு முன் நியூசிலாந்தை சேர்ந்த சுசி பேட்ஸ் மட்டுமே 4000 ரன்களை அடித்துள்ளார். அத்துடன் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் 4000 ரன்கள் அடித்த முதல் இந்திய மற்றும் ஆசிய வீராங்கனை ஆகிய 2 வரலாற்றையும் மந்தனா படைத்துள்ளார். அந்தப் பட்டியல்:
1. சுசி பேட்ஸ்: 4716
2. ஸ்மிரிதி மந்தனா: 4002*
3. ஹர்மன்ப்ரீத் கௌர்: 3654
4. சாமாரி அட்டப்பட்டு: 3473
5. சோபி டேவின்: 3431
இதையும் படிங்க: முறையாக தெரிவிக்கப்படாமல் திடீரென நிர்வாகம் எடுத்த முடிவால் சுப்மன் கில் அதிருப்தி – விவரம் இதோ
தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அதிரடியாக 10 பவுண்டரியை பறக்க விட்ட ஜெமிமா அரை சதமடித்து 69* (43) ரன்கள் குவித்தார். அவருடன் கேப்டன் ஹர்மன்பிரீத் 15* (16) ரன்கள் எடுத்ததால் 14.4 ஓவரிலேயே 122/2 ரன்களை அடித்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக இலங்கையை தோற்கடித்தது. அதனால் 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலைப் பெற்றுள்ள இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜெமிமா ஆட்டநாயகி விருதை வென்றார்.



