ஐசிசி 2026 அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நமீபியா மற்றும் ஜிம்பாப்வே நாட்டில் ஜனவரி 15ஆம் தேதி துவங்குகிறது. அந்தத் தொடருக்கு தயாராகும் நோகத்தில் ஐசிசி பயிற்சி போட்டிகளை நடத்துகிறது. அதில் இந்திய அண்டர்-19 அணி தங்களது முதல் பயிற்சி போட்டியில் ஸ்காட்லாந்து அணியை எதிர்கொண்டது.
அப்போட்டி ஜனவரி 10ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 1:00 மணிக்கு ஜிம்பாப்வே நாட்டில் உள்ள புலவாயோ மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ஆயுஷ் மாத்ரே 70 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 22 (19) ரன்களில் திரும்பினார்.
சூர்யவன்சி அதிரடி:
அவருடன் சேர்ந்து மறுபுறம் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்சி அரை சதமடித்து சிக்ஸர்களை வெளுத்து வாங்கினார். அடுத்து வந்த ஆரோன் ஜார்ஜுடன் சேர்ந்து 78 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர் சதத்தை நெருங்கினார். ஆனால் அப்போது 9 பவுண்டரி 7 சிக்ஸருடன் 96 (50) ரன்களில் அவுட்டான அவர் லேசான ஏமாற்றத்துடன் சென்றார்.
இருப்பினும் மறுபுறம் பொறுப்புடன் விளையாடிய ஆரோன் ஜார்ஜ் 61 (58) ரன்கள் குவித்து அவுட்டானார். மிடில் ஆடரில் ஸ்காட்லாந்தை பந்தாடிய விகான் மல்ஹோத்ரா – அபிஞான் குண்டு ஜோடி இந்தியாவை 300 ரன்கள் தாண்ட உதவினார்கள். தொடர்ந்து அசத்திய அந்த ஜோடியில் விகான் மல்கோத்ரா 77 (81) ரன்களும் குண்டு 55 (48) ரன்களும் குவித்து அவுட்டானார்கள்.
இளம் இந்தியா வெற்றி:
லோயர் ஆர்டரில் ஆர்எஸ் அம்பரீஷ் அதிரடியாக 28* (24), தீபேஸ் திவேந்திரன் 10* (5), முகமத் இனான் 9 (9) ரன்கள் எடுத்தனர். அதனால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இந்திய அண்டர்-19 அணி 374/8 ரன்கள் குவித்து அசத்தியது. ஸ்காட்லாந்துக்கு அதிகபட்சமாக ஓலி ஜோன்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக ஸ்காட்லாந்து விளையாடிய போது மழை வந்ததால் 23.2 ஓவரில் 234 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையும் படிங்க: இன்னும் 25 ரன்கள் அடிச்சா போதும்.. சச்சின் மற்றும் சங்ககாராவுக்கு அடுத்து விராட் கோலி – படைக்கப்போகும் சாதனை
அதைத் துரத்திய ஸ்காட்லாந்தை 23.2 ஓவரில் 112/9 ரன்களுக்கு சுருட்டிய இந்திய அண்டர்-19 அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராபின்சன் 30, மேக்ஸ் சாப்ளின் 22, மனு சரஸ்வத் 23* ரன்கள் எடுத்தனர். இந்திய அணிக்கு அதிகபட்சமாக திபேஸ் திவேந்திரன், கிளன் பட்டேல் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர். இதைத்தொடர்ந்து இந்தியா தங்களது அடுத்த பயிற்சிப் போட்டியில் இங்கிலாந்தை ஜனவரி 12ஆம் தேதி புலவாயோவில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.



