IND vs RSA : இவங்களா பி டீம். இன்னைக்கு பாத்தீங்களா ஆட்டத்தை – சாதனையுடன் முடித்த இந்திய அணி

INd vs SA Shubman Gill Dhawan
- Advertisement -

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோற்ற இந்தியா வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய 2வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 1 – 1 என்ற கணக்கில் சமனடைந்த இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 3வது போட்டி அக்டோபர் 11ஆம் தேதியன்று தலைநகர் டெல்லியில் துவங்கியது. மழையால் அரை மணி நேரம் தாமதமாக மதியம் 2 மணிக்கு துவங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய தென்னாபிரிக்கா ஆரம்ப முதலே திண்டாடியது.

அந்த அணிக்கு அதிரடி தொடக்கத்தை கொடுக்க வேண்டிய ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் குயின்டன் டி காக் 6 (10), ஜானெமன் மாலன் 15 (27) என சொற்ப ரன்களில் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்து களமிறங்கிய ரீசா ஹென்றிக்ஸ் 3 (21) ஐடன் மார்க்ரம் 9 (19) என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி மேலும் அதிர்ச்சி கொடுத்தனர். அதனால் 43/4 என்ற மோசமான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு கேப்டனாக களமிறங்கியதால் பொறுப்புடன் விளையாடி காப்பாற்றுவார் என்று கருதப்பட்ட டேவிட் மில்லர் தமிழகத்தின் வாசிங்டன் சுந்தர் பந்தில் கிளீன் போல்டானார்.

- Advertisement -

மிரட்டிய பவுலிங்:
அதனால் மேலும் தடுமாறிய அந்த அணியை காப்பாற்ற முயன்ற ஹென்றிச் க்ளாஸென் அதிகபட்சமாக 4 பவுண்டரியுடன் 34 (42) ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார். அடுத்து வந்த வீரர்களும் இந்தியாவின் தரமான பந்து வீச்சில் வந்த வாக்கிலேயே பெவிலியன் திரும்பியதால் 27.1 ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த தென்னாப்பிரிக்கா வெறும் 99 ரன்களுக்கு பரிதாபமாக ஆல் அவுட்டானது. அந்தளவுக்கு அட்டகாசமாக பந்து வீசிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும் வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ் மற்றும் சபாஷ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 100 என்ற எளிதான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே சுப்மன் கில் அதிரடியை தொடக்கி 42 ரன்கள் ஓபனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தாலும் மறுபுறம் தடவிய கேப்டன் ஷிகர் தவான் தடுமாறி 8 (12) ரன்களில் ரன் அவுட்டானார். அந்த நிலைமையில் களமிறங்கிய இஷான் கிசான் அதிரடியாக விளையாடாமல் பொறுமையாக விளையாடியதால் ஏற்பட்ட அழுத்தத்தில் 2 பவுண்டரியுடன் 10 (8) ரன்களில் அவுட்டானார். ஆனாலும் மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த சுப்மன் கில் வெற்றியை நெருங்கிய போது துரதிஷ்டவசமாக 8 பவுண்டரியுடன் 49 (57) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

- Advertisement -

சாதித்த இளம்படை:
இருப்பினும் கடந்த போட்டியில் சதமடித்த ஷ்ரேயஸ் ஐயர் மறுபுறம் நிதானமாக பேட்டிங் செய்து 3 பவுண்டரி 2 சிக்சருடன் 28* (23) ரன்கள் எடுக்க அவருடன் சஞ்சு சாம்சன் 2* (4) ரன்கள் எடுத்ததால் 19.3 ஓவரில் 105/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டி நடைபெற்ற டெல்லி மைதானம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதை ஆரம்பத்திலேயே நேரில் பார்த்து கணித்து டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்தியா வேகம் மற்றும் சுழல் ஆகிய இரண்டையும் சேர்த்து தென் ஆப்பிரிக்காவை தாக்கியது.

அதற்கு பதில் சொல்ல முடியாத தென் ஆப்பிரிக்கா வெறும் 99 ரன்களுக்கு சுருண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக தனது குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்து பரிதாப சாதனை படைத்தது. இதற்குமுன் கடந்த 1999இல் நைரோபியில் 117 ரன்களுக்கு சுருண்டதே முந்தைய சாதனையாக இருந்தது. அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவை 100 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய முதல் ஆசிய அணி என்ற பெருமையும் இந்தியா பெற்றுள்ளது. முன்னதாக நடைபெற்று முடிந்த டி20 தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணி உலக கோப்பையில் பங்கேற்க ஆஸ்திரேலியா சென்றுள்ளது.

அதனால் ஷிகர் தவான் தலைமையில் இத்தொடரில் களமிறங்கிய இளம் அணியை பி டீம் என்று அனைவரும் கருதினாலும் அதைப் பொய்யாக்கும் வகையில் முதன்மை வீரர்கள் இல்லாமலேயே இந்த அபார சாதனையுடன் கோப்பையை வென்று காட்டியுள்ளது. சமீபத்தில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகிய வெளிநாடுகளிலும் எதிரணிகளை சாய்த்த இதே இளம் அணி தற்போது சொந்த மண்ணிலும் வென்று ஏராளமான உலகத்தரம் வாய்ந்த வீரர்களை கொண்ட நாடு என்ற பெருமையை இந்தியாவிற்கு சேர்த்துள்ளது.

Advertisement