30 ரன்ஸ்.. 25 வருட வரலாற்று தோல்விக்காக தெ.ஆ அணிக்கு.. டபுள் பதிலடி கொடுத்த இந்தியா வெற்றி

IND vs RSA 2
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதிய 5வது டி20 போட்டி டிசம்பர் 19ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் இரவு 7.00 மணிக்கு துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு 63 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த அபிஷேக் சர்மா 34 (21) ரன்களை விளாசி அவுட்டானார்.

அடுத்து வந்த திலக் வர்மா அதிரடி காட்டிய நிலையில் எதிர்புறம் தமது பங்கிற்கு அசத்திய சஞ்சு சாம்சன் 37 (22) ரன்கள் குவித்து அவுட்டானார். குறிப்பாக கம்பேக் போட்டியில் சுப்மன் கில்லை விட அவர் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார். அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் 5 (7) ரன்களில் அவுட்டாகி இன்னும் ஃபார்முக்கு வரவில்லை என்பதைக் காண்பித்தார்.

- Advertisement -

இந்தியா அசத்தல்:

மறுபுறம் தொடர்ந்து அசத்திய திலக் வர்மா அரை சதமடித்தார். ஆனால் அடுத்து வந்த ஹர்திக் பாண்டியா தென்னாப்பிரிக்கா பவுலர்களை அடித்து நொறுக்கி பட்டாசாக விளையாடி 16 பந்தில் 50 ரன்கள் அடித்தார். அதன் வாயிலாக அபிஷேக் ஷர்மாவை முந்திய அவர் இந்தியாவுக்காக 2வது வேகமான அரை சதமடித்த வீரராக சாதனை படைத்தார். தொடர்ந்து அசத்திய பாண்டியா 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 63 (25) ரன்களை விளாசி அவுட்டானார்.

மறுபுறம் தொடர்ந்து கலக்கிய திலக் வர்மா 73 (42) ரன்கள் விளாசி ரன் அவுட்டானார். இறுதியில் சிவம் துபே 11* (3) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்ததால் இந்தியா 231/5 ரன்கள் அடித்தது. தென் ஆப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக கோர்பின் போஸ்க் 2 விக்கெட்டுகள் எடுத்தார். அடுத்து விளையாடிய தெனாப்பிரிக்காவுக்கு குவிண்டன் டீ காக் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

இந்தியாவின் பதிலடி:

ஆனால் எதிர்ப்புறம் தடுமாறிய ரீசா ஹென்றிக்ஸ் 13 (12) ரன்களில் வருண் சக்கரவர்த்தி சுழலில் அவுட்டானார். மறுபுறம் அரை சதமடித்து மிரட்டிய டீ காக் 65 (35) ரன்கள் எடுத்த போது பும்ரா வேகத்தில் அவுட்டானார். அதே போல அதிரடி காட்ட முயற்சித்த தேவால்ட் பிரேவிஸ் 31 (17), டேவிட் மில்லர் 18 (14) ரன்களில் ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் வேகத்தில் அவுட்டானார்கள். மிடில் ஆர்டரில் கேப்டன் ஐடன் மார்க்ரம் 6, டோனவன் பெரீரா 0, ஜார்ஜ் லிண்டே 16 ரன்களில் வருண் சக்கரவர்த்தி சுழலில் விக்கெட்டை இழந்தனர்.

- Advertisement -

அடுத்து வந்த வீரர்களும் பெரிய ரன்கள் எடுக்கத் தவறியதால் 20 ஓவரில் தென்னாப்பிரிக்கா 201/8 ரன்களை மட்டுமே எடுத்தது. அதனால் 30 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 3 – 1 (5) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை வென்றது. இதையும் சேர்த்து சொந்த மண்ணில் தொடர்ந்து 14வது டி20 தொடரை வென்ற இந்தியா தங்களை நம்பர் ஒன் அணி என்பதையும் நிரூபித்துள்ளது.

இதையும் படிங்க: இவரையா பெஞ்சில் வெச்சீங்க? இப்போ அதுவே சாம்சனை கம்பேக் கொடுக்க வெச்சுருச்சு.. கொட்டிய சாஸ்திரி

மேலும் இச்சுற்றுப் பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தென்னாபிரிக்காவிடம் 25 வருடங்கள் கழித்து இந்தியா தோற்றது. அதற்கு அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்று பதிலடி கொடுத்த இந்தியா தற்போது டி20 தொடரையும் வென்று தென் ஆப்பிரிக்காவுக்கு டபுள் பதிலடி கொடுத்துள்ளது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ஜஸ்ப்ரித் பும்ரா 2, வருண் சக்கரவர்த்தி 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Advertisement