இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் மோதிய 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி டிசம்பர் 17ஆம் தேதி ஜோஹன்ஸ்பர்க் நகரில் நடைபெற்றது. இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்த நிலையில் இந்தியா சார்பில் தமிழகத்தின் சாய் சுதர்சன் அறிமுகமாக விளையாடும் வாய்ப்பை பெற்றார்.
அதைத் தொடர்ந்து பேட்டிங் செய்ய தளமிறங்கிய தென்னாப்பிரிக்காவுக்கு முதல் ஓவரிலேயே ரீசா ஹென்றிக்ஸை டக் அவுட்டாக்கிய அரஷ்தீப் சிங் அடுத்து வந்த வேன் டெர் டுஷனை கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டலை கொடுத்தார். அதனால் 3/2 என்ற மோசமான துவக்கத்தை பெற்ற தென்னாப்பிரிக்காவை காப்பாற்ற முயற்சித்த டீ ஜோர்சியையும் 28 ரன்களில் அவுட்டாக்கிய அரஷ்தீப் அடுத்து வந்த அதிரடி வீரர் ஹென்றிச் க்ளாசனை 6 ரன்களில் கிளீன் போல்ட்டாக்கினார்.
இந்தியா வெற்றி:
அடுத்த ஓவரிலேயே நட்சத்திர வீரர் டேவிட் மில்லரை 2 ரன்களில் காலி செய்த ஆவேஷ் கான் அடுத்ததாக வந்த வியான் முல்டரை 2 ரன்களில் டக் அவுட்டாக்கினார். அதனால் 58/7 என சரிந்த தென்னாப்பிரிக்கா ஆண்டிலோ பெலுக்வியோ 33 ரன்கள் எடுத்து காப்பாற்ற முயன்ற போதிலும் 27.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து வெறும் 116 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அந்தளவுக்கு பந்து வீச்சில் தெறிக்கவிட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக அரஷ்தீப் சிங் 5, ஆவேஷ் கான் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 117 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு அறிமுகப் போட்டியில் தமிழகத்தின் சாய் சுதர்சன் அதிரடியாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் சற்று தடுமாறிய ருதுராஜ் 5 ரன்களில் முல்டர் வேகத்தில் அவுட்டானார்.
அந்த நிலைமையில் வந்த ஸ்ரேயாஸ் ஐயர் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் இந்தியாவை வெற்றி பாதிக்கு அழைத்து வந்தார். அதில் சாய் சுதர்சன் தன்னுடைய முதல் போட்டியிலேயே முதல் முறையாக அரை சதமடித்து அசத்திய நிலையில் எதிர்ப்புறம் தன்னுடைய பங்கிற்கு 6 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்ட ஸ்ரேயாஸ் ஐயரும் அரை சதமடித்து 52 (45) ரன்களில் பெலுக்வியோ வேகத்தில் அவுட்டானார்.
இதையும் படிங்க: 200 பந்துகள்.. முதல் போட்டியிலேயே சாதித்த சாய் சுதர்சன்.. தெ.ஆ மண்ணில் இந்தியா பெரிய சாதனை வெற்றி
ஆனால் கடைசி வரை அவுட்டாகாமல் 9 பவுண்டரியுடன் 55* (43) ரன்கள் எடுத்த சாய் சுதர்சன் முதல் போட்டியிலேயே 16.4 ஓவரில் இந்தியா 117/2 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினர். மேலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களுடைய அறிமுக போட்டியிலேயே அரை சதமடித்த 4வது இந்திய துவக்க வீரர் என்ற சாதனையும் சாய் சுதர்சன் படைத்தார். அதை விட இப்போட்டியில் 200 பந்துகள் மீதம் வைத்து கண்ட இந்தியா ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் பந்துகள் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்து 1 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.



