- Advertisement -
இந்திய கிரிக்கெட்

காப்பாற்றிய ரோஹித், தோனி.. தீயாக ஆர்பி சிங்.. தெ.ஆ அணியை நாக் அவுட்டாக்கிய இந்தியா.. டி20 உ.கோ ரீவைண்ட்

ஐசிசி 2024 டி20 உலகக்கோப்பை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. அதில் கோப்பையை வெல்வதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தயாராகி வருகிறது. தென்னாபிரிக்காவில் கடந்த 2007ஆம் ஆண்டு முதல் முறையாக துவங்கிய டி20 உலகக் கோப்பை தொடர்களில் இந்தியா சில மகத்தான சாதனைகளையும் மறக்க முடியாத வெற்றிகளையும் பதிவு செய்துள்ளது.

அந்த வரிசையில் 2007 டி20 உலகக் கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு இந்தியா தகுதி பெற்ற விதத்தை ரசிகர்களால் மறக்க முடியாது. ஆம் அந்தத் தொடரில் ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக பவுல் அவுட் முறையில் இந்தியா வென்றது. ஆனால் நியூசிலாந்துக்கு எதிராக தோற்ற இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக யுவராஜ் சிங் அதிரடியில் வெற்றி கண்டது.

- Advertisement -

நாக் அவுட் சுவாரஸ்யம்:
அந்த சூழ்நிலையில் செப்டம்பர் 20ஆம் தேதி டர்பன் நகரில் இந்தியா தனது கடைசி லீக் போட்டியில் தென்னாபிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொண்டது. அதில் வென்றால் மட்டுமே நாக் அவுட் சுற்றுக்கு செல்ல முடியும் என்ற வாழ்வா – சாவா நிலையில் களமிறங்கிய இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் இந்திய அணிக்கு கௌதம் கம்பீர் 19, சேவாக் 11, தினேஷ் கார்த்திக் 0, உத்தப்பா 15 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் 61/4 என ஆரம்பத்திலேயே திண்டாடிய இந்தியாவை கேப்டன் தோனி அதிரடியாக 45 (33) ரன்களும் ரோகித் சர்மா 50* (40) ரன்களும் அடித்து காப்பாற்றினர். அவர்களுடைய 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் காரணமாக தப்பிய இந்தியா போராடி 154 ரன்களை இலக்காக நிர்ணயிக்கிறது. இருப்பினும் அதை துரத்திய தென்னாப்பிரிக்கா 20 ஓவரில் 126 ரன்கள் எடுத்தாலே ரன்ரேட் அடிப்படையில் தோல்வியை சந்தித்தாலும் நாக் அவுட்டுக்கு செல்லலாம் என்ற சாதகமான நிலையில் களமிறங்கியது.

- Advertisement -

அதனால் எக்ஸ்ட்ரா அழுத்தத்தை சந்தித்த இந்திய அணி அதற்கெல்லாம் அஞ்சாமல் அற்புதமாக பந்து வீசியது. குறிப்பாக ஹெர்சல் கிப்ஸ் 1, கேப்டன் கிரேம் ஸ்மித் 4, ஷான் பொல்லாக் 0 என 3 முக்கிய வீரர்களை ஆர்பி சிங் தனது அற்புதமான வேகத்தால் சொற்ப ரன்களில் காலி செய்தார். அதே போல ஏபி டீ வில்லியர்ஸை 1 ரன்னில் அவுட்டாக்கிய ஸ்ரீசாந்த் 36 (41) ரன்கள் அடித்துப் போராடிய மார்க் பவுச்சரை முக்கிய நேரத்தில் கிளீன் போல்டாக்கினார்.

அதே போல 7வது இடத்தில் அல்பி மோர்கெல் 36 (37) ரன்கள் விளாசி சவாலை கொடுத்த போது ஆர்பி சிங் கிளீன் போல்டாக்கி மிரட்டினார். இறுதியில் கடைசி ஓவரில் ரன்ரேட் அடிப்படையில் தென்னாப்பிரிக்காவுக்கு 17 ரன்கள் தேவைப்பட்ட போது சிறப்பாக பந்து வீசிய ஹர்பஜன் சிங் 7 ரன்கள் மட்டும் கொடுத்து ஒரு விக்கெட்டை எடுத்தார். அதனால் 20 ஓவரில் தென் ஆப்பிரிக்கா ரன்கள் 116/9 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையும் படிங்க: டி20 உ.கோ 2024 : இந்தியா – நியூசிலாந்து அணிகளின் பலம், பலவீனம் என்ன? புள்ளி விவரத்தோடு ஒரு அலசல்

அந்த வகையில் வாழ்வா – சாவா போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்று வாழ்வை கண்ட இந்தியா சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவை நாக் அவுட் செய்து வீட்டுக்கு அனுப்பியது. இந்தியாவுக்கு ஆர்பி சிங் 4, ஸ்ரீசாந்த் 2, ஹர்பஜன் 2 விக்கெட்டுகளை எடுத்து மறக்க முடியாத வெற்றியை பரிசளித்தனர். அதனால் செமி ஃபைனலுக்கு கடைசி அணியாக தகுதி பெற்ற இந்தியா கடைசியில் கோப்பையும் வென்று சாதனை படைத்தது.

- Advertisement -