வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் 2024 டி20 உலகக் கோப்பைக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த தொடரில் இந்திய கிரிக்கெட் அணி 2007க்குப்பின் கோப்பையை வெல்ல வேண்டுமெனில் அதற்கு நியூஸிலாந்தை தாண்டி செல்ல வேண்டும் என்றே சொல்லலாம். ஏனெனில் சிறிய நாடாக இருந்தாலும் காலம் காலமாக ஐசிசி தொடர்களில் இந்தியாவை தோற்கடித்து ரசிகர்களின் நெஞ்சங்களை உடைப்பதில் நியூசிலாந்து கில்லாடியாக செயல்பட்டு வருகிறது.
அப்படிப்பட்ட தரமான நியூசிலாந்து அணி இம்முறை கேன் வில்லியம்சன் தலைமையில் கோப்பையை வெல்வதற்காக களமிறங்குகிறது. சிஎஸ்கே அணிக்காக இந்த வருடம் காயத்தால் விளையாடாத டேவோன் கான்வே அதிலிருந்து குணமடைந்து உலகக் கோப்பையில் விளையாட உள்ளார். விக்கெட் கீப்பராக விளையாட உள்ள அவருடன் ஃபின் ஆலன் துவக்க வீரராக களமிறங்க உள்ளார்.
இந்தியா – நியூஸிலாந்து:
அந்த வகையில் நியூஸிலாந்துக்கு ஓப்பனிங் ஜோடி மிகவும் தரமானதாகவும் அதிரடியானதாகவும் அமைந்துள்ளது. அதைத்தொடர்ந்து மிடில் ஆர்டரில் டேரில் மிட்சேல், ரச்சின் ரவீந்திரா ஆகியோருடன் மார்க் சேப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், ஜிம்மி நீசம் தேர்வாகியுள்ளனர். ஆனால் இவர்கள் டி20 கிரிக்கெட்டில் இதுவரை தொடர்ச்சியாக பெரிய ரண்களை குவித்ததில்லை என்பது பின்னாடைவாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் இவர்கள் பகுதி நேர பவுலர்கள் என்பது நியூசிலாந்துக்கு பலமாகும். அதே போல கிளன் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடக்கூடிய ஃபினிஷராகவும் பகுதி நேர ஸ்பின்னராகவும் வலு சேர்க்கிறார். மேலும் மிட்சேல் சான்ட்னர் பேட்டிங்கை விட பந்து வீச்சில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆல் ரவுண்டராக அறியப்படுகிறார். அத்துடன் இஷ் சோதி சுழல் பந்து வீச்சு துறையில் பலம் சேர்க்கிறார்.
வேகப்பந்து வீச்சு துறையில் டிம் சௌதீ, லாக்கி பெர்குசன் கொஞ்சம் ரன்களை வாரி வழங்குபவர்களாக இருந்தாலும் ட்ரெண்ட் போல்ட், மாட் ஹென்றி அதற்கு ஈடாக துல்லியமாக செயல்படும் தன்மையை கொண்டுள்ளனர். மறுபுறம் இந்திய அணியில் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடக்கூடிய துவக்க வீரராக தேர்வாகியுள்ளார். ஒருவேளை அவர்கள் ஏமாற்றினால் அடுத்ததாக நங்கூரத்தை போடுவதற்கு நம்பிக்கை நாயகன் விராட் கோலி தயாராக இருக்கிறார்.
அதே போல 4வது இடத்தில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் சூரியகுமார் யாதவ் 360 டிகிரியிலும் அதிரடியாக விளையாடுவது அவசியம். அதைத் தொடர்ந்து கீப்பர்களாக தேர்வாகியுள்ள சஞ்சு சாம்சன், ரிஷப் பண்ட் ஆகியோர் இதுவரை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அசத்தியதில்லை. எனவே 2024 ஐபிஎல் தொடரில் வைத்திருக்கும் நல்ல ஃபார்மை அவர்கள் தொடர்வது அவசியமாகிறது.
ஆனால் இந்த டாப் 5 பேட்ஸ்மேன்களில் யாருமே பகுதி நேர பவுலர்கள் கிடையாது என்பது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவாகும். அதே போல ஹர்டிக் பாண்டியா மோசமான ஃபார்மில் இருப்பதும் சிவம் துபே சமீப காலங்களில் பவுலிங் செய்யவில்லை என்பதும் கவலைக்குரிய அம்சமாகும். மேலும் ஜடேஜா – அக்சர் படேல் ஆகியோர் பந்து வீச்சுக்கு நிகராக எப்போதாவது மட்டுமே பேட்டிங்கில் அசத்தக்கூடியவர்களாக இருக்கின்றனர்.
இதையும் படிங்க: இனி ரிஷப் பண்ட்டால நிச்சயமா கிரிக்கெட் ஆடவே முடியாதுன்னு நெனச்சேன் – மனம்திறந்த ரிக்கி பாண்டிங்
சுழல் பந்து துறையில் குல்தீப் யாதவ் 2023 ஆசிய கோப்பை முதலே அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். ஆனால் சஹால் ரன்களை வாரி வழங்குவது கவலையை கொடுக்கிறது. இறுதியாக பும்ராவுக்கு நிகராக சிராஜ், அர்ஷிதீப் சிங் சவாலை கொடுக்கும் வேகப்பந்து வீச்சாளர்களாக இருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகும். எனவே வழக்கம் போல நியூசிலாந்தை வீழ்த்த வேண்டுமெனில் இம்முறையும் இந்தியா அபரிதமான அபார செயல்பாடுகளை வெளிப்படுத்துவது அவசியமாகிறது.