இலங்கையில் மகளிர் ஆசிய கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது. அதில் ஜூலை 19ஆம் தேதி நடப்பு சாம்பியன் இந்தியா தங்களுடைய முதல் போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு பல்லகேல் நகரில் துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு துவக்க வீராங்கனை பெரோசாவை 5 (5) ரன்னில் காலி செய்த பூஜா வஸ்திரகர் மற்றொரு துவக்க வீராங்கனை முனிபா அலியையும் 11 (11) ரன்னில் பெவிலியன் அனுப்பினார். அதனால் 26/2 தடுமாறிய அந்த அணிக்கு அமீன் நிதானமாக விளையாட முயற்சித்தார். ஆனால் எதிர்ப்புறம் வந்த ஆலியா ரியாஸ் 6, கேப்டன் நிதா தார் 8 ரன்னில் அவுட்டாகி அழுத்தத்தை உண்டாக்கினர்.
இந்தியா வெற்றி:
அடுத்த சில ஓவரில் மறுபுறம் நங்கூரமாக விளையாடிய அமீன் 25 (35) ரன்களில் அவுட்டானார். இறுதியில் தூபா அசன் 22 (19) ரன்களும் பாத்திமா சனா 22* (16) ரன்கள் எடுத்தும் பாகிஸ்தானை 20 ஓவர்கள் விடாத இந்தியா 19.2 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கியது. அந்தளவுக்கு பந்து வீச்சில் அசத்திய இந்தியா சார்பில் தீப்தி சர்மா 3, ரேணுகா சிங், பூஜா வஸ்திரகர், ஸ்ரேயங்கா பாட்டில் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
அதைத்தொடர்ந்து 109 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷபாலி வர்மா ஆகியோர் பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அடித்து நொறுக்கிறார்கள். அந்த வகையில் பவர் பிளே ஓவர்கள் கடந்தும் அதிரடியாக விளையாடிய இந்த ஜோடி 9.3 ஓவரில் 85 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது.
அதில் ஷபாலி 6 பவுண்டரி 1 சிக்சருடன் 40 (29) ரன்களும் மந்தனா 9 பவுண்டரியுடன் 45 (31) ரன்கள் குவித்து அரூப் சிங் சுழலில் அவுட்டானார்கள். அதைத்தொடர்ந்து வந்த ஹேமலதா அதிரடியாக விளையாட முயற்சித்து 14 (11) ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் கேப்டன் ஹர்மன்பிரீத் 5* ரன்களும் ஜெமிமா 3* ரன்களும் எடுத்ததால் 14 1 ஓவரிலேயே 109/3 ரன்கள் எடுத்த இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.
அதன் காரணமாக குரூப் ஏ பிரிவின் 2 புள்ளிகளைப் பெற்ற இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து கோப்பையை தக்க வைக்கும் பயணத்தை வெற்றியுடன் துவங்கியுள்ளது. அத்துடன் இந்தப் போட்டியில் அடித்த ஒரு சிக்சரையும் சேர்த்து மகளிர் ஆசிய கோப்பையில் ஷபாலி வர்மா தனது கேரியரில் மொத்தம் 7 சிக்சர்கள் அடித்துள்ளார்.
இதையும் படிங்க: கம்பீருடன் இந்திய அணியில் இணைந்து பயணிப்பது குறித்து பேசிய விராட் கோலி – என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?
இதன் வாயிலாக மகளிர் ஆசிய கோப்பையில் அதிக சிக்சர்கள் அடித்த வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் இலங்கையின் சமாரி அட்டப்பட்டு மற்றும் இந்தியாவின் ரூமேலி தார் ஆகியோர் தலா 6 சிக்சர்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.