74 ரன்ஸ்.. பாகிஸ்தானை சொல்லி அடித்த கில்.. இந்தியா வெற்றி.. கம்பீருக்கு பின் அபிஷேக் 17 வருட சாதனை

IND vs PAK
- Advertisement -

ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் செப்டம்பர் 21ஆம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நடைபெற்றது. துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவரில் போராடி 171/5 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு அபிஷேக் ஷர்மா கோட்டை விட்ட கேட்சை பயன்படுத்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் பர்கான் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தி அதிகபட்சமாக 58 (45) ரன்கள் எடுத்தார். இருப்பினும் பகார் ஜமான் 15, சாய்ம் ஆயுப் 21, ஹுசைன் தாலத் 10, முகமத் நவாஸ் 21 ரன்கள் மட்டுமே எடுத்தனர். கடைசி நேரத்தில் கேப்டன் சல்மான் ஆகா 17* (13), பஹீம் அஸ்ரப் 20* (8) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தனர்.

- Advertisement -

அபிஷேக் – கில் அபாரம்:

இந்திய அணிக்கு சிவம் துபே 2, ஹர்திக் பாண்டியா 1, குல்தீப் யாதவ் 1 விக்கெட் எடுத்தனர். அடுத்து விளையாடிய இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா – சுப்மன் கில் ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் பவுலர்களை வெளுத்து வாங்கினர். குறிப்பாக அப்ரிடிக்கு எதிராக முதல் பந்திலேயே சிக்ஸர் பறக்க விட்ட உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா பாகிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கி அட்டகாசமாக விளையாடினார்.

அதே போல ஷாஹீன் அப்ரிடியிடம் உங்களை கவர்ஸ் திசையில் அடிப்பேன் என்று கில் தம்முடைய பங்கிற்கு சொல்லி அடித்தார். அப்படி 10 ஓவர்கள் வரை அபாரமாக விளையாடிய அந்த ஜோடி 15 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்தது. அப்போது சுப்மன் கில் 8 பவுண்டரியுடன் 47 (28) ரன்களில் அவுட்டாகி அரை சதத்தை நழுவ விட்டார்.

- Advertisement -

இந்தியா 2வது முறையாக வெற்றி:

அடுத்து வந்த கேப்டன் சூரியகுமார் டக் அவுட்டாக்கி ஏமாற்றத்தைக் கொடுத்தார். இருப்பினும் மறுபுறம் 24 பந்துகளில் அரை சதத்தை அடித்த அபிஷேக் பாகிஸ்தானை பந்தாடி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். தொடர்ந்து அசத்திய அவர் 6 பவுண்டரி 5 சிக்ஸருடன் 74 (39) ரன்களை 189.74 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அவுட்டானார்.

அதன் வாயிலாக கௌதம் கம்பீருக்கு (2007) பின் பாகிஸ்தானுக்கு எதிராக 17 வருடங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் அரை சதத்தை அடித்த இந்திய ஓப்பனிங் பேட்ஸ்மேன் என்ற சாதனையை அபிஷேக் படைத்தார். அடுத்து வந்த சஞ்சு சாம்சன் தடுமாறி 13 (17) ரன்னில் விக்கெட்டை இழந்தார். ஆனால் மறுபுறம் மிரட்டிய திலக் வர்மா 2 பவுண்டரி 2 சிக்ஸருடன் 30* (19) ரன்கள் விளாசி ஃபினிஷிங் செய்தார்.

இதையும் படிங்க: இது இந்தியாவின் சப்போர்ட் அம்பயரின் அநியாயம்.. பாகிஸ்தான் விமர்சனத்தை நேரலையில் உடைத்த சாஸ்திரி

கூடவே பாண்டியா 7* (7) ரன்கள் எடுத்ததால் 18.5 ஓவரிலேயே 174/4 ரன்களை எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 2 விக்கெட் எடுத்தும் இரண்டாவது முறையாக தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement