காமன்வெல்த் கேம்ஸ் 2022 : வாழ்வா – சாவா போட்டியில் பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்திய சிங்கப்பெண்கள், முழுவிவரம்

IND vs Pak Common Wealth Games Womens
Advertisement

ஒலிம்பிக் போட்டிகளுக்கு அடுத்ததாக உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக போற்றப்படும் காமன்வெல்த் 2022 போட்டிகள் கடந்த ஜூலை 29-ஆம் தேதியன்று இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக துவங்கியது. உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான நாடுகளைச் சேர்ந்த முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்குபெறும் இந்த விளையாட்டு தொடரில் தடகளம், டென்னிஸ் உட்பட ஒலிம்பிக் விளையாட்டில் பங்குபெறும் அத்தனை விளையாட்டுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் வரலாற்றிலேயே முதல் முறையாக மகளிர் கிரிக்கெட் 20 ஓவர் போட்டிகளாக இந்த வருடம் சேர்க்கப்பட்டுள்ளது. கடைசியாக கடந்த 1998இல் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இடம் பெற்ற ஆடவர் கிரிக்கெட் போட்டிகளில் ஸ்டீவ் வாக் தலைமையிலான ஆஸ்திரேலியா தங்கப்பதக்கம் வென்றது.

IND vs Aus Womens Common Wealth Renukha Singh

அதன்பின் பல்வேறு காரணங்களுக்காக கிரிக்கெட் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் இந்த வருடம் மகளிர் 20 ஓவர் போட்டிகளாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உட்பட உலகின் டாப் 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் அனைத்து அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் மற்றொரு அணியுடன் தலா 1 முறை மோத வேண்டும் என்பதன் அடிப்படையில் லீக் சுற்று விறுவிறுப்பாக தொடங்கியுள்ளது. அதில் குரூப் ஏ பிரிவில் இடம் பிடித்துள்ள உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை தனது முதல் லீக் போட்டியில் எதிர்கொண்ட இந்தியா 30 ஓவர்கள் அசத்தலாக செயல்பட்ட போதிலும் கடைசி 10 ஓவர்களில் சொதப்பி வெற்றியை தாரை வார்த்தது.

- Advertisement -

வாழ்வா – சாவா:
அதனால் ஆரம்பத்திலேயே பெரிய பின்னடைவை சந்தித்த இந்தியா நாக் அவுட் சுற்றுக்கு செல்ல வென்றே தீரவேண்டும் என்ற நிலைமையில் ஜூலை 31-ஆம் தேதியன்று பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. பர்மிங்காம் நகரில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அப்போட்டி மழையால் தாமதமாக துவங்கி 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அந்த நிலையில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு ஜாவேத் டக் அவுட்டாகி ஏமாற்றினார்.

அதனால் 0/1 என்ற சுமாரான தொடக்கத்தை பெற்ற அந்த அணிக்கு அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் பீஸ்மா மகரூப் மற்றொரு தொடக்க வீரரான முனீபா அலியுடன் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு காப்பாற்றிய போது 17 (19) ரன்களில் ஸ்னே ராணாவிடம் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் மறுபுறம் 3 பவுண்டரி 1 சிக்சருடன் சிறப்பாக பேட்டிங் செய்து கொண்டிருந்த முனீபாவும் 32 (30) ரன்களில் அவுட்டானார். ஆனால் அதன்பின் அனலாக பந்துவீசிய இந்திய வீராங்கனைகள் சொஹைல் 10, நசீம் 10, ரியாஸ் 18 என பாகிஸ்தானின் மிடில் ஆடர் வீராங்கனைகளை அடுத்தடுத்த ஓவர்களில் சொற்ப ரன்களில் அவுட் செய்து பெவிலியன் திரும்பினர்.

- Advertisement -

தெறிக்கவிட்ட சிங்கப்பெண்கள்:
அடுத்து வந்த வீராங்கனைகளும் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் வந்த வாக்கிலேயே ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்ததால் ஒரு கட்டத்தில் 51/1 ரன்கள் என்ற நிலையில் இருந்த பாகிஸ்தான் சீட்டுக்கட்டு சரிவது போல 18 ஓவரில் 99 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட்டானது. அந்த அளவுக்கு அற்புதமாக பந்துவீசிய இந்தியாவின் சார்பில் அதிகபட்சமாக ஸ்னே ராணா மற்றும் ராதா யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

அதனால் 100 என்ற சுலபமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கி பவர்ஃபிளே ஓவர்களில் பட்டாசாக பேட்டிங் செய்த ஷாபாலி வர்மா – ஸ்மிருதி மந்தனா ஜோடி 6 ஓவர்களில் 60 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

- Advertisement -

அதில் 2 பவுண்டரி 1 சிக்சருடன் ஷாபாலி வர்மா 16 (9) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த மேக்னா 14 (16) ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் அழகாகவும் பேட்டிங் செய்த நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 8 பவுண்டரி 3 சிக்சருடன் அரைசதம் அடித்து 63* (42) ரன்கள் விளாசி கடைசி வரை அவுட்டாகாமல் அற்புதமான பினிசிங் கொடுத்தார். அதனால் 11.4 ஓவரிலேயே 102/2 ரன்களை எடுத்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று அசத்தியது.

இதையும் படிங்க: தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்ததால் தப்பித்தார் – சந்தடி சாக்கில் பாகிஸ்தானை கலாய்த்த பாக் வீரர்

இந்த வாழ்வா – சாவா போட்டியில் அட்டகாசமாக செயல்பட்டு வாழ்வை கண்ட இந்தியா மிகப்பெரிய வெற்றியை பெற்றதன் காரணமாக குரூப் ஏ புள்ளி பட்டியலில் முதல் போட்டியில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி 2 புள்ளிகளுடன் ரன்ரேட் அடிப்படையில் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இதனால் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி நடைபெறும் பார்படாஸ் அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி லீக் போட்டியில் வென்றால் அடுத்த சுற்றான அரையிறுதிக்கு இந்திய சிங்கப்பெண்கள் தகுதி பெறுவது உறுதியாகியுள்ளது.

Advertisement