IND vs NZ : சவாலை கொடுத்த நியூஸிலாந்து போராடி சாய்த்த இந்தியா, லக்னோ மைதானத்தின் வரலாற்றை மாற்றியது எப்படி

Hardik Pandya IND vs NZ
- Advertisement -

நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை வென்று உலகின் நம்பர் ஒன் அணியாக முன்னேறிய இந்தியா அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்கள் இல்லாத நிலைமையில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணி ராஞ்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் முக்கிய நேரங்களில் சொதப்பி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று ஆரம்பத்திலே பின்னடைவை சந்தித்தது. அந்த நிலைமையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டி ஜனவரி 29ஆம் தேதியன்று இரவு 7 மணிக்கு லக்னோவில் நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

ஆனால் சுழலுக்கு சாதகமாக இருந்த பிட்ச்சில் இந்திய ஸ்பின்னர்களிடம் தடுமாறிய அந்த அணிக்கு பின் ஆலன் 11, டேவோன் கான்வே 11, கிளன் பிலிப்ஸ் 5, டார்ல் மிட்சேல் 8, மார்க் சேப்மேன் 14, மைக்கேல் பிரேஸ்வெல் 14 என முக்கிய வீரர்கள் ஆரம்பம் முதலே சீரான இடைவெளிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தை கொடுத்தனர். இறுதி வரை ஆல் அவுட்டாவதை தவிர்த்தாலும் 20 ஓவரில் 99/8 ரன்கள் மட்டுமே எடுத்த அந்த அணியை அபாரமாக பந்து வீசி கட்டுப்படுத்திய இந்தியா சார்பில் அரஷ்தீப் சிங் 2, ஹர்திக் பாண்டியா 1, வாஷிங்டன் சுந்தர் 1, தீபக் ஹூடா 1, குல்தீப் யாதவ் 1, சஹால் 1 விக்கெட்களை எடுத்தனர்.

- Advertisement -

சவாலை கொடுத்த லக்னோ:
அதை தொடர்ந்து 100 என்ற சுலபமான இலக்கை தூரத்திய இந்தியாவுக்கு பிட்ச் சுழலுக்கு சாதகமாக இருப்பதை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட முயற்சித்த சுப்மன் கில் 2 பவுண்டரியுடன் 11 (9) ரன்கள் எடுத்து அவுட்டான நிலையில் மறுபுறம் தடவலாக செயல்பட்ட இஷான் கிஷன் 19 (32) ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார். அப்போது வந்த ராகுல் திரிபாதியும் 13 (18) ரன்களில் அவுட்டாகி சென்றதால் 50/3 என தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்து வந்த சூரியகுமார் யாதவ் வழக்கத்திற்கு மாறாக நிதான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

ஆனால் அவருக்கு கம்பெனி கொடுக்க வேண்டிய வாஷிங்டன் சுந்தர் அவசரப்பட்டு 10 ரன்களில் ரன் அவுட்டானார். அதனால் கடைசி நேரத்தில் பரபரப்பு ஏற்பட்டாலும் மிகவும் மெதுவாக விளையாடிய சூரியகுமார் யாதவ் பிட்ச் எப்படி சுழன்றாலும் அதற்கு வளைந்து கொடுக்காமல் நிலைத்து நின்று பேட்டிங் செய்தார். அவருடன் ஹர்திக் பாண்டியாவும் இணைந்து விளையாடினாலும் இருவருமே அதிரடி காட்ட முடியாத அளவுக்கு பிட்ச் மிகவும் சவாலாக இருந்ததை பயன்படுத்தி நியூசிலாந்து கடைசி ஓவர் வரை போட்டியை எடுத்து வந்தது.

- Advertisement -

அதனால் போட்டியில் மேலும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்ட போது 3வது பந்தில் கொடுத்த கேட்ச்சை தவற விட்ட நியூசிலாந்துக்கு தண்டனை கொடுக்கும் வகையில் 5வது பந்தில் பவுண்டரியை பறக்க விட்ட சூரியகுமார் யாதவ் இந்தியாவை வெற்றி பெற வைத்தார். குறிப்பாக அதுவரை பவுண்டரி அடிக்காத அவர் அந்த ஒரே பவுண்டரியுடன் 26* (31) ரன்களும் பாண்டியா 1 பவுண்டரியுடன் 15* (20) ரன்களும் எடுத்ததால் 19.5 ஓவரில் 101/4 ரன்கள் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்று 1 – 1* (3) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்து சொந்த மண்ணில் எங்களை அவ்வளவு எளிதில் வீழ்த்த முடியாது என்பதை நிரூபித்துள்ளது.

குறிப்பாக இப்போட்டி நடைபெற்ற லக்னோ மைதானத்தில் வரலாற்றில் இதற்கு முன் நடைபெற்ற 5 டி20 போட்டிகளிலும் முதலில் பேட்டிங் செய்த அணிகள் தான் வென்றன. அதே போலவே வெறும் 100 ரன்களை எளிதில் எடுக்க முடியாத அளவுக்கு இம்முறை இம்மைதானம் கடுமையான சவாலை கொடுத்த போதிலும் அதற்கு வளைந்து கொடுக்காத இந்திய பேட்ஸ்மேன்கள் இலக்கு குறைவாக இருந்ததை பயன்படுத்தி கடைசி ஓவரில் போராடி வெற்றி பெற வைத்தனர்.

இதையும் படிங்க: IND vs NZ : இந்திய வீரராக டி20 கிரிக்கெட்டில் உச்சம் தொட்ட யுஸ்வேந்திர சாஹல் – புவியின் சாதனை முறியடிப்பு

குறிப்பாக சூரியகுமார் டி20 கிரிக்கெட்டில் இவ்வளவு மெதுவாக விளையாடுவாரா என்று ரசிகர்கள் ரசிகர்கள் வியக்கும் அளவுக்கு லக்னோ மைதானம் மேஜிக் நிகழ்த்தியது என்று சொல்லலாம். அதே மைதானத்தை பயன்படுத்தி முதலில் இந்திய பவுலர்கள் கச்சிதமாக செயல்பட்டு இப்போட்டியில் வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்து இந்தியாவை நம்பர் ஒன் டி20 அணி என்பதையும் நிரூபிக்க முக்கிய பங்காற்றினார்கள்.

Advertisement