ஓப்பனிங்கிலேயே நேபாளை அடித்த சாய் சுதர்சன், வளரும் ஆசிய கோப்பையில் இந்தியா செமி ஃபைனலுக்கு சென்றது எப்படி?

IND A vs NEP A
- Advertisement -

இலங்கையில் வளர்ந்து வரும் ஆசிய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2023 தொடர் நடைபெற்று வருகிறது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்த டாப் 8 அணிகள் விளையாடும் இந்த தொடரில் 2022 அண்டர்-19 உலக கோப்பையை வென்ற கேப்டன் யாஷ் துள் தலைமையில் இந்தியா ஏ அணி குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ளது. அதைத்தொடர்ந்து துவங்கிய லீக் சுற்றில் முதல் போட்டியிலேயே அமீரகத்தை தோற்கடித்த இந்தியா ஜூலை 17ஆம் தேதி மதியம் 2 மணிக்கு கொழும்புவில் நடைபெற்ற தன்னுடைய 2வது லீக் போட்டியில் நேபாளை எதிர்கொண்டது. அந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாள் முதலில் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி முதல் ஓவரிலிருந்தே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து 37/5 என சரிந்தது. இருப்பினும் மிடில் ஆர்டரில் நங்கூரமாக செயல்பட்ட கேப்டன் ரோஹித் பௌடேல் நிதானமான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரை சதமடித்து 7 பவுண்டரியுடன் 65 (85) ரன்கள் குவித்து போராடி அவுட்டானார். ஆனால் அவரை தவிர்த்து குல்சன் ஜா அதிரடியாக 2 பவுண்டரி 2 சிக்சருடன் 38 (30) ரன்கள் எடுத்த போதிலும் இதர வீரர்கள் இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு பதில் சொல்ல முடியாமல் ஆட்டமிழந்தனர்.

- Advertisement -

எளிதான வெற்றி:
அதனால் 39.2 ஓவரிலேயே நேபாளை வெறும் 167 ரன்களுக்கு சுருட்டி ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்த இந்தியா சார்பில் அதிகபட்சமாக நிசாந்த் சிந்து 4 விக்கெட்டுகளையும் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் 3 விக்கெட்டுகளையும் ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 168 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு தமிழக வீரர் சாய் சுதர்சன் மற்றும் அபிஷேக் ஷர்மா ஆகியோர் ஆரம்பம் முதலே சுமாராக பந்து வீசிய நேபாள் பவுலர்களை நங்கூரமாகவும் அதிரடியாகவும் எதிர்கொண்டு விரைவாக ரன்களை சேர்த்தனர்.

அதில் ஒருபுறம் சாய் சுதர்சன் சற்று நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் சற்று அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா முதல் ஆளாக அரை சதமடித்து அசத்தினார். அந்த வகையில் 19 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 139 ரன்கள் ஓப்பனிங் ஃபார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்த இந்த ஜோடியில் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 12 பவுண்டரி 2 சிக்சருடன் 87 (69) ரன்கள் எடுத்தபோது கேப்டன் ரோகித் பௌடேல் பந்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சீரான பேட்டிங்கை வெளிப்படுத்திய சாய் சுதர்சன் 8 பவுண்டரி 1 சிக்சருடன் இந்தியா ஏ அணிக்காக தம்முடைய முதல் அரை சதத்தை பதிவு செய்து 58* (52) ரன்கள் விளாசி அசத்தினார். அவருடன் கடைசி நேரத்தில் துருவ் ஜுரல் அதிரடியாக 1 பவுண்டரி 2 சிக்சரை பறக்க விட்டு 21* (12) ரன்கள் எடுத்து சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 22.1 ஓவரிலேயே 172 ரன்கள் எடுத்த இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு 87 ரன்கள் எடுத்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருது வென்ற நிலையில் லீக் சுற்றில் 2 போட்டியிலும் 2 வெற்றிகளை பதிவு செய்த இந்தியா புள்ளி பட்டியலில் 4 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை ஆரம்பத்திலேயே உறுதி செய்துள்ளது. இந்த நிலைமையில் ஜூலை 19ஆம் தேதி பாகிஸ்தானை தன்னுடைய கடைசி லீக் போட்டியில் இந்தியா எதிர்கொள்கிறது.

இதையும் படிங்க:ஷேன் வார்ன் மறைவிற்கு பின்னர் தான் எனக்கே அது தெரியும். எல்லாம் விதி என்ன பண்றது – யுஸ்வேந்திர சாஹல் வருத்தம்

அந்த போட்டியை பொறுத்தே அரையிறுதி சுற்றில் இந்தியாவின் போட்டி அமையும் என்று சொல்லலாம். இருப்பினும் தற்சமயத்தில் பார்க்கும் போது இந்தியாவைப் போலவே குரூப் ஏ பிரிவில் ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. எனவே அரையிறுதி சுற்றில் ஆப்கானிஸ்தான் அல்லது இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளில் ஏதேனும் ஒன்றை இந்தியா எதிர்கொள்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement