IND vs IRE : ஒரு பச்ச புள்ளய போட்டு இப்படியா அடிப்பீங்க? அயர்லாந்து அணியை சுருட்டி வீசிய இந்திய அணி – நடந்தது என்ன?

IND vs IRE Arshdeep Prasid krishna
- Advertisement -

அயர்லாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் மழையின் உதவியுடன் 2 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. ரோகித் சர்மா போன்ற முதன்மை வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களுடன் களமிறங்கியுள்ள இந்தியாவை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தும் நிலையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற்ற இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 2வது போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு ஜெயஸ்வால் அதிரடியாக விளையாட முயற்சித்து 18 (11) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த திலக் வர்மா 1 (2) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அதனால் 34/2 என தடுமாற்றமான துவக்கத்தை பெற்ற இந்தியாவுக்கு மறுபுறம் ருதுராஜ் கைக்வாட் நிதானமாக விளையாடி நிலையில் அடுத்ததாக வந்த சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடிய 3வது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்து 5 பவுண்டரி 1 சிக்சருடன் 40 (26) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் நிதானமாக விளையாடிய ருதுராஜ் 6 பவுண்டரி 1 சிக்சருடன் அரை சதமடித்து 58 (43) ரன்கள் அடித்து அவுட்டானார்.

- Advertisement -

அசத்தல் வெற்றி:
ஆனாலும் 15 ஓவரில் 129/4 என தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்ததாக வந்த ரிங்கு சிங் சிவம் துபே ஆகியோர் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தினர். இருப்பினும் நன்கு செட்டிலான பின் கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக விளையாடி அடித்து நொறுக்கிய அவர்களில் ரிங்கு சிங் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 38 (21) ரன்களும் சிவம் துபே 2 சிக்சருடன் 21* (16) ரன்களும் எடுத்து நல்ல பினிஷிங் கொடுத்தனர். அதனால் 20 ஓவர்களில் இந்தியா 185/5 ரன்கள் எடுக்க அயர்லாந்து சார்பில் அதிகபட்சமாக பேரி மெக்கார்த்தி 2 விக்கட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து 186 என்ற கடினமான இலக்கை துரத்திய அயர்லாந்துக்கு ஆண்டி பால்பரின் அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் தடுமாறிய கேப்டன் பால் ஸ்டிர்லிங்கை 3வது ஓவரின் 4வது பந்தில் டக் அவுட்டாக்கிய பிரசித் கிருஷ்ணா அடுத்தவந்த லார்கன் டுக்கரையும் கடைசி பந்தில் டக் அவுட்டாக்கினார். போதாகுறைக்கு அடுத்து வந்த ஹரி டெக்டரை 7 (7) ரன்களில் அவுட்டாக்கிய ரவி பிஷ்னோய் அடுத்த சில ஓவர்களில் அடுத்ததாக வந்து அதிரடி காட்ட முயற்சித்த குர்ட்டீஸ் கேம்பரையும் 18 (17) ரன்களில் காலி செய்தார்.

- Advertisement -

இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஆண்டி பால்பரின் அரை சதமடித்து போராடிய நிலையில் எதிர்புறம் வந்த ஜார்ஜ் டாக்ரெல் தடுமாறி 13 (11) ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்த ஓவரிலேயே ஆண்டி பால்பிரினும் 5 பவுண்டரி 4 சிக்சருடன் போராடி 72 (51) ரன்களில் அவுட்டானதால் அயர்லாந்தின் வெற்றி கேள்விக்குறியானது. இறுதியில் மார்க் அடைர் 3 சிக்ஸரை பறக்க விட்டு 23 (15) ரன்களில் அவுட்டானதால் 20 ஓவர்களில் முடிந்தளவுக்கு போராடியும் 152/8 ரன்கள் மட்டுமே எடுத்த அயர்லாந்தை சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்திய இந்தியா சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதனால் 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா 2 – 0* (2) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றி தங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்துள்ளது. இந்த போட்டியில் பேட்டிங்கில் ஆரம்பத்தில் தடுமாறிய இந்தியாவுக்கு கடைசி 2 ஓவரில் ரிங்கு சிங் மற்றும் சிவம் துபே ஆகியோர் 42 ரன்கள் அடித்ததே வெற்றியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அதே போல 186 ரன்களை துரத்திய அயர்லாந்துக்கு ஆரம்பத்திலேயே 2 முக்கிய பேட்ஸ்மேன்களை பிரசித் கிருஷ்ணா டக் அவுட்டாக்கியது சேசிங்கை கடினப்படுத்தியது.

இதையும் படிங்க:IND vs IRE : ருதுராஜ் நிதானம், டெத் ஓவரில் அடித்து நொறுக்கிய ரிங்கு சிங், சிவம் துபே – கடைசி 2 ஓவரில் நடந்த மேஜிக்

அந்த அழுத்தத்தை விடாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியா சிறப்பான வெற்றி கண்டுள்ளது. குறிப்பாக விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே இளம் வீரர்களுடன் வெஸ்ட் இண்டீஸ் சந்தித்த தோல்வியிலிருந்து “துண்டு ஒரு தடவை தான் தவறும்” என்பது போல மீண்டெழுந்துள்ள இந்தியா சிறப்பான வெற்றி பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement