8 தொடர்கள்.. இங்கிலாந்தின் பஸ்பாலை பார்சல் கட்டிய இந்தியா.. உலகின் வேறு எந்த அணியும் ருசிக்காத சாதனை வெற்றி

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. அதில் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றது. அதனால் இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் துவங்கிய நான்காவது போட்டியில் கண்டிப்பாக வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்து 353 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 112/5 என தடுமாறிய 300 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் ஜோ ரூட் தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்தி சதமடித்து அதிகபட்சமாக 122*, ஓலி ராபின்சன் 58 ரன்களும் எடுத்து ஓரளவு காப்பாற்றினார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

சாதித்த இந்தியா:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததனர். அதனால் ஜெய்ஸ்வால் 73 ரன்கள் அடித்தும் 177/7 என திணறிய இந்தியா 300 ரன்கள் தொடாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது அபாரமாக விளையாடிய துருவ் ஜுரேல் 90, குல்தீப் யாதவ் 28 ரன்கள் அடித்ததால் தப்பிய இந்தியா 307 ரன்கள் எடுத்தது.

இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத்தொடர்ந்தது 46 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி அதிகபட்சமாக 60 ரன்கள் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 110/4 என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின் தீயாக செயல்பட்டு அந்த அணியை 145 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக அஸ்வின் 5, குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

இறுதியில் 192 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா – ஜெய்ஸ்வால் ஆகியோர் 82 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து அபாரமான துவக்கத்தை கொடுத்தனர். இருப்பினும் அதில் ஜெய்ஸ்வால் 37 ரன்களில் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் கேப்டன் ரோகித் சர்மாவும் அரை சதமடித்து 55 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்து வந்த ரஜத் படிடார் 0, ரவீந்திர ஜடேஜா 4, சர்பராஸ் கான் 0 ரன்களில் அவுட்டானதால் திடீரென 120/5 என்று சரிந்த இந்தியாவின் வெற்றி கேள்விக்குறியானது.

இருப்பினும் மறுபுறம் 3வது இடத்தில் களமிறங்கி நிதானமாக விளையாடிக் கொண்டிருந்த சுப்மன் கில்லுடன் அடுத்ததாக வந்த துருவ் ஜுரேல் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நேரம் செல்ல செல்ல விக்கெட்டை விடாமல் அடப்பிடித்து சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் கில் அரை சதமடித்து 52* ரன்களும் ஜுரேல் 39* ரன்களும் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார்கள்.

அதனால் 192/5 ரன்கள் எடுத்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 3 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரை ஆரம்பத்திலேயே கைப்பற்றியுள்ளது. குறிப்பாக முதல் போட்டியில் தோற்றாலும் பின்னர் கொதித்தெழுந்து அடுத்த 3 போட்டிகளில் ஹாட்ரிக் வெற்றிகளை பெற்ற இந்தியா சொந்த மண்ணில் கடந்த 12 வருடங்களாக உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு தொடரில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை தக்க வைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக 12 வருடம் கழித்து உங்களை தோற்கடிப்போம் என்று எச்சரித்த இங்கிலாந்தை 4வது போட்டியிலேயே சாய்த்த இந்தியா சொந்த மண்ணில் எப்போதும் நாங்கள் தான் கில்லி என்பதை காண்பித்துள்ளது. அதை விட பென் ஸ்டோக்ஸ் – ப்ரெண்டன் மெக்கல்லம் தலைமையில் இதற்கு முன் தென்னாபிரிக்கா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளுக்கு எதிராக விளையாடிய 7 தொடர்களில் 4 வெற்றி 3 ட்ராவை மட்டுமே பதிவு செய்த இங்கிலாந்து தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்டு வந்தது. ஆனால் தற்போது அதை 8வது தொடரில் நிறுத்தியுள்ள இந்தியா பஸ்பால் இங்கிலாந்து அணியை ஒரு தொடரில் தோற்கடித்த முதல் அணியாக சாதனை படைத்துள்ளது. அதனால் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement