- Advertisement -
இந்திய கிரிக்கெட்

97 ரன்ஸ்.. ஆஸியை முந்திய இந்தியா.. இங்கிலாந்திடம் உலக சாதனை வெற்றி.. ஷபாலி – மந்தனா உலக சாதனை

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அத்தொடரின் முதல் போட்டி நாட்டிங்கம் கிரிக்கெட் மைதானத்தில் ஜூன் 28ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்கு நடைபெற்றது. அப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா அதிரடியாக விளையாடினார். அவருடன் சேர்ந்து விளையாடிய ஷபாலி வர்மா 77 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 20 ரன்னில் அவுட்டானார். இதையும் சேர்த்து அந்த ஜோடி 22வது முறையாக 50க்கும் மேற்பட்ட ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தது.

- Advertisement -

உலக சாதனை ஜோடி:

இதன் வாயிலாக சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடி என்ற உலக சாதனையை ஷபாலி – மந்தனா படைத்துள்ளார்கள். இதற்கு முன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த அலிசா ஹீலி – பெத் மூனி ஜோடி 21 முறை 50+ ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனை. அடுத்ததாக வந்த ஹர்லின் தியோல் அதிரடியாக விளையாடி 43 (23) ரன்கள் குவித்து அவுட்டானார்.

இந்தப் பக்கம் மந்தனா 27 பந்துகளில் 50 ரன்கள் அடித்தார். தொடர்ந்து அசத்தலாக விளையாடிய மந்தனா 15 பவுண்டரி 3 சிக்சருடன் சதத்தை அடித்து 112 (62) ரன்கள் குவித்து அவுட்டானார். இதன் வாயிலாக டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 வகையான மகளிர் கிரிக்கெட்டிலும் சதத்தை அடித்த முதல் இந்திய மற்றும் ஆசிய வீராங்கனை என்ற 2 வரலாற்று சாதனையை மந்தனா படைத்தார். அத்துடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் மந்தனா படைத்தார்.

- Advertisement -

உலக சாதனை வெற்றி:

அவருடைய சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவரில் இந்தியா 210/5 ரன்களை எடுத்தது. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக லாரன் பெல் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்துக்கு சோபி டுங்லி 7, டேனியல் வைட் 0, டம்மி பியூமோண்ட் 10, எமி ஜோன்ஸ் 10, அலிஸ் கேப்சி 5 என முக்கிய வீராங்கனைகள் இந்தியாவின் அபார பந்து வீச்சில் சொற்ப ரன்னில் விக்கெட்டை இழந்தார்கள்.

அதனால் கேப்டன் நட் ஸ்கீவர் அதிரடியாக 66 (42) ரன்கள் எடுத்துப் போராடியும் இங்கிலாந்தை 14.5 ஓவரில் வெறும் 113 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய இந்தியா 97 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ரன்கள் அடிப்படையில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அணியாக இந்தியா உலக சாதனை படைத்துள்ளது.

இதையும் படிங்க: ஸ்டோக்ஸ் இப்படித்தான் இருந்தாரு.. அவங்க செட்டாகிட்டா சுப்மன் கில் வெற்றிகளை குவிப்பாரு.. அலெஸ்டர் குக்

இதற்கு முன் 2019ஆம் ஆண்டு செல்ம்ஸ்போர்ட் மைதானத்தில் இங்கிலாந்தை 93 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்கடித்ததே முந்தைய உலக சாதனை. இந்தியாவுக்கு அதிகபட்சமாக ராதா யாதவ் 2, தீப்தி சர்மா 2, ஸ்ரீ சரணி 4 விக்கெட்டுகளை எடுத்து மிரட்டினார்கள்.

- Advertisement -