இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுக்கு சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட துவங்கியுள்ளது. அந்தத் தொடரின் முதல் போட்டி ஜனவரி 22ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்றது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்துக்கு பில் சால்ட் 0, பென் டக்கெட் 4 ரன்களில் அர்ஷ்தீப் சிங் வேகத்தில் ஆட்டமிழந்தார்கள்.
அடுத்ததாக வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் ஹரி ப்ரூக் 17, லியம் லிவின்ஸ்டன் 0, ஜேக்கப் பேத்தல் 7, ஓவர்டன் 2 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார்கள். மறுபுறம் போராடிய பட்லர் அரை சதத்தை அடித்து 68 (44) ரன்கள் குவித்து தமிழக வருண் சக்கரவர்த்தி சுழலில் சிக்கினார்.
அபிஷேக் அதிரடி:
இறுதியில் 20 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்தியாவுக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3, அக்சர் பட்டேல் 2, ஹர்திக் பாண்டியா 2, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பின்னர் 133 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு துவக்க வீரர் சஞ்சு சாம்சன் அதிரடியாக 26 (20) ரன்கள் விளாசி அவுட்டானார்.
அடுத்ததாக வந்த சூரியகுமார் டக் அவுட்டானாலும் மறுபுறம் அபிஷேக் ஷர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மா நிதானமாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதை பயன்படுத்தி வெளுத்து வாங்கிய அபிஷேக் ஷர்மா 5 பவுண்டரி 8 சிக்ஸர்களுடன் அரை சதத்தை விளாசி 79 (34) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார்.
சாதனை வெற்றி:
இறுதியில் திலக் வர்மா 19* (16), பாண்டியா 3* ரன்கள் எடுத்த உதவியுடன் 13.5 ஓவரிலேயே 133-3 ரன்கள் எடுத்த இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. மேலும் இப்போட்டியில் 43 பந்துகள் மீதம் வைத்து இந்தியா வெற்றி பெற்றது. இதன் வாயிலாக இங்கிலாந்துக்கு எதிராக பந்துகள் அடிப்படையில் இந்தியா தங்களுடைய பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.
இதையும் படிங்க: 132க்கு ஆல் அவுட்.. இங்கிலாந்தை சுருட்டிய சக்ரவர்த்தி.. இந்தியாவின் ஆல் டைம் நாயகனாக அர்ஷ்தீப் சாதனை
இதற்கு முன் 2021 அஹ்மதாபாத் மற்றும் 2012 புனே மைதானங்களில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டிகளில் தலா 13 பந்துகள் மீதம் வைத்து இந்தியா வென்றதே முந்தைய சாதனை. இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக ஜோப்ரா ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் வலுவான இங்கிலாந்தை முதல் போட்டியிலேயே வீழ்த்திய இந்தியா 1 – 0* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.