இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டி ஜனவரி 22ஆம் தேதி இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் துவங்கியது. அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களம் இறங்கிய இங்கிலாந்துக்கு பிலிப்ஸ் சால்ட்டை டக் அவுட்டாக்கிய அர்ஷ்தீப் அடுத்த ஓவரில் பென் டக்கட்டை 4 ரன்களில் காலி செய்தார்.
அதனால் 17-2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இங்கிலாந்துக்கு அடுத்ததாக வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடினார். அவருடன் ஜோடி சேர்ந்து அதிரடி காட்ட முயற்சித்த ஹரி ப்ரூக்கை 17 ரன்களில் போல்ட்டாக்கிய தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி அடுத்ததாக வந்த லிவிங்ஸ்டனையும் டக் அவுட்டாக்கினார்.
அசத்தல் பவுலிங்:
அதற்கடுத்ததாக வந்த ஜேக்கப் பேத்தல் 7 (14) ரன்களில் ஹர்திக் பாண்டியா வேகத்தில் அவுட்டானார். அடுத்ததாக வந்த ஜெமி ஓவர்டன் 2, கஸ் அட்கின்ஸன் 2 ரன்களில் அக்சர் படேல் சுழலில் சிக்கினார்கள். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் 8 பவுண்டரி 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு 68 (44) ரன்கள் எடுத்திருந்த போது வருண் சக்கரவர்த்தி சுழலில் நித்திஷ் ரெட்டியின் அபார கேட்ச்சால் பெவிலியன் சென்றார்.
இறுதியில் ஜோப்ரா ஆர்ச்சர் 12, அடில் ரசித் 8 ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இங்கிலாந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இந்திய அணிக்கு தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி 3, அக்சர் பட்டேல், ஹர்திக் பாண்டியா மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அந்த வகையில் அதிரடியான இங்கிலாந்தை முதல் போட்டியிலேயே சிறப்பாக பவுலிங் செய்து இந்தியா சுருட்டி அசத்தியுள்ளது.
ஆல் டைம் அர்ஷ்தீப்:
முன்னதாக இந்த போட்டியில் எடுத்த இரண்டு விக்கெட்டுகளையும் சேர்த்து இந்திய வீரர் அர்ஷ்தீப் சிங் இதுவரை மொத்தம் 61 டி20 போட்டிகளில் 97 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன் சஹால் 80 போட்டிகளில் 96 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனை.
இதையும் படிங்க: முதல் டி20யில் டாஸ் வென்ற சூரியகுமார்.. ஷமி இல்லை.. தமிழக வீரருக்கு இடம்.. இந்திய பிளேயிங் லெவன் இதோ
கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகமான அவர் வெறும் மூன்றே வருடங்களில் 61 போட்டிகளில் ஆல் டைம் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். அந்தளவுக்கு சமீப வருடங்களாக அசத்தும் அவர் 2024 டி20 உலகக் கோப்பையிலும் 17 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். அதன் வாயிலாக ஒரு டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பவுலர் என்ற உலக சாதனையையும் அவர் ஏற்கனவே நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.