மலேசியாவில் ஐசிசி 2025 அண்டர்-19 மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் நிக்கி பிரசாத் தலைமையில் விளையாடும் இந்திய அணி தங்களுடைய லீக் மற்றும் சூப்பர் 6 சுற்றில் அடுத்தடுத்த வெற்றிகளுடன் செமி ஃபைனலுக்கு தகுதி பெற்றது. அடுத்ததாக இந்தியா தங்களுடைய செமி ஃபைனல் போட்டியில் வலுவான இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது.
அந்தப் போட்டி மலேசியாவில் உள்ள கோலாலம்பூரில் ஜனவரி 31ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 12 மணிக்கு துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஜெமிமா ஸ்பின்ஸ் 9, ட்ருடி ஜான்சம் 0 ரன்களில் பருணிக்கா சிசோடியாவிடம் விக்கெட்டை இழந்தார்கள்.
இந்தியா அசத்தல்:
இருப்பினும் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் விளையாடிய மற்றொரு துவக்க வீராங்கனை டேவினா பெரினை 45 (40) ரன்கள் எடுத்தார். அப்போது அவரை காலி செய்த கேப்டன் ஆயுசி சுக்லா அவருடன் சேர்ந்து மறுபுறம் விளையாடிய கேப்டன் அபி நோர்க்ரோவையும் 30 (25) ரன்களில் அவுட்டாக்கினார். அதைப் பயன்படுத்திய இந்திய அணி அடுத்ததாக வந்த சார்லட் ஸ்டப்ஸ் 4, கேட்டி ஜோன்ஸ் 2, சார்லட் லாம்பெர்ட்டை 0 ரன்களில் அவுட்டாக்கி அசத்தியது.
இறுதியில் அமு சுரேன்குமார் 14* ரன்கள் எடுத்த உதவியுடன் 20 ஓவரில் இங்கிலாந்து 113/8 ரன்கள் எடுத்தது. இந்தியாவுக்கு பருணிக்கா சிசோடியா 3, வைஷ்ணவி சர்மா 3, ஆயுசி சுக்லா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். அடுத்ததாக 114 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கொங்காடி திரிசா அதிரடியாக விளையாடி 35 ரன்கள் குவித்து போப் பிரட் வேகத்தில் அவுட்டானார்.
ஃபைனலில் நடப்பு சாம்பியன்:
அவருடன் சேர்ந்து விளையாடிய தமிழக வீராங்கனை கமலினி 8 பவுண்டரியுடன் அரை சதத்தை அடித்து 56* (50) ரன்கள் கொடுத்தார். அவருடன் சனிக்கா சால்க் 11* (12) ரன்கள் எடுத்ததால் 15 ஓவரில் 117-1 ரன்கள் எடுத்த இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அதனால் இங்கிலாந்தை தோற்கடித்து நாக் அவுட் செய்த இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெற்று அசத்தியது.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகிய ஆஸி அணியின் நட்சத்திர வீரர் – ஐ.பி.எல் விளையாடுவதும் சந்தேகம்
இதைத் தொடர்ந்து இந்தத் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டி வரும் பிப்ரவரி இரண்டாம் தேதி கோலாலம்பூரில் நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் மற்றொரு செமி ஃபைனலில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த தென்னாப்பிரிக்க அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி நடப்பு சாம்பியனான கோப்பையை தக்க வைக்க தயாராக உள்ளது.



