IND vs BAN : 5 நாளும் டஃப் கொடுத்த வங்கதேசம், மிகப்பெரிய போராட்ட வெற்றியால் இலங்கையை இந்தியா முந்தியது எப்படி?

Kuldeep Yadav Virat Kohli
- Advertisement -

வங்கதேசத்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் முதலில் பங்கேற்ற ஒருநாள் தொடரை இழந்த இந்தியா அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டிசம்பர் 14ஆம் தேதியன்று சட்டோகிராம் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கிய இத்தொடரின் முதல் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து 404 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் விராட் கோலி போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானாலும் புஜாரா 90, ஸ்ரேயாஸ் ஐயர் 86, ரிஷப் பண்ட் 46, அஷ்வின் 58, குல்தீப் யாதவ் 40 என மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்பட்டு தேவையான ரன்களை குவித்தனர்.

வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக டைஜூல் இஸ்லாம் மற்றும் மெகதி ஹாசன் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி இந்திய பவுலவர்களின் தரமான பந்து வீச்சில் முதல் பந்திலிருந்தே சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது. லிட்டன் தாஸ், சாகிப் அல் ஹசன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டான அந்த அணிக்கு அதிகபட்சமாக முஸ்பிக்கர் ரஹீம் 28 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

- Advertisement -

முன்னேறிய இந்தியா:
அதை தொடர்ந்து 254 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா ஃபாலோ ஆன் கொடுக்காமல் மீண்டும் பேட்டிங் செய்து தனது 2வது இன்னிங்ஸில் 258/2 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக இளம் தொடக்க வீரர் சுப்மன் கில் தன்னுடைய முதல் சதமடித்து 110 ரன்களும் புஜாரா 1443 நாட்கள் கழித்து நிம்மதி சதமடித்து 102* ரன்களும் குவித்தனர். இறுதியில் 513 என்ற மெகா இலக்கை துரத்திய வங்கதேசத்துக்கு இம்முறை நங்கூரமாக நின்று வரலாற்றிலேயே முதல் முறையாக 100 ரன்களை கடந்து 124 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த சாண்டோ 67 ரன்களும் அறிமுக போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்த ஜாகிர் ஹாசன் 100 ரன்களும் குவித்து அவுட்டானார்கள்.

ஆனால் அவர்களுக்குப் பின் யாசிர் அலி 5, லிட்டன் தாஸ் 19, முஸ்பிகர் ரஹீம் 23, நுருள் ஹசன் 3 என முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த இந்தியா வெற்றிக்கு போராடியது. அதனால் இன்று துவங்கிய கடைசி நாளில் 4 விக்கெட்டுகள் தேவைப்பட்ட நிலையில் மெகதி ஹசனை தொல்லை கொடுப்பதற்கு முன்பே 13 ரன்கள் காலி செய்த இந்தியா வெற்றிக்கு போராடிய கேப்டன் சாகிப் அல் ஹசனை 84 ரன்களில் அவுட்டாக்கியது. அத்துடன் டெயில் எண்டர்களையும் அடுத்தடுத்து டக் அவுட்டாக்கிய இந்தியா வங்கதேசத்தை 324 ரன்களுக்கு சுருட்டி 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தியா சார்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அக்சர் படேல் 4 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இப்போட்டியில் ரவீந்திர ஜடேஜா காயமடைந்ததால் 22 மாதங்கள் கழித்து வாய்ப்பு பெற்ற குல்தீப் யாதவ் மொத்தமாக 8 விக்கெட்டுகளையும் 40 ரன்களையும் எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதால் ஆட்டநாயகன் விருது வென்றார்.

அதை விட கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாத நிலைமையில் 5 நாட்களிலும் கடுமையான சவாலை கொடுத்த வங்கதேசத்தை முக்கிய நேரங்களில் சிறப்பாக செயல்பட்டு சாய்த்த இந்தியா இந்த மிகப்பெரிய வெற்றியால் 1 – 0* (2) என்ற கணக்கில் இத்தொடரில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்று அசத்தியுள்ளது.

- Advertisement -

அதை விட 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் விளையாடுவதற்கு 2 – 0 (2) என்ற கணக்கில் இத்தொடரை கைப்பற்ற வேண்டிய இந்தியா முதல் வெற்றியைப் பெற்று புள்ளி பட்டியலில் ஏற்கனவே இருந்த 4வது இடத்திலிருந்து 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. குறிப்பாக 55.77% புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா 53.33% புள்ளிகளை பெற்றுள்ள இலங்கையை முந்தி அசத்தியுள்ளது.

இதையும் படிங்க: இந்த விளம்பரத்துல மட்டும் நான் நடிக்கவே மாட்டேன். 24 ஆண்டுகளுக்கு முன்பே மறுத்த சச்சின் – சுவாரசிய தகவல்

முதலிரண்டு இடங்களில் ஆஸ்திரேலியா (75%) மற்றும் தென்னாப்பிரிக்க (60%) அணிகள் உள்ளன. இத்தொடரை வெல்வதுடன் வரும் பிப்ரவரி மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பையை குறைந்தபட்சம் 3 – 0 (4) என்ற கணக்கில் வென்றால் மட்டுமே பைனலுக்கு இந்தியா செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement