
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. கடந்த 2007 முதல் நடைபெற்று வரும் இந்த தொடரில் ரசிகர்களால் மறக்க முடியாத அளவுக்கு சில மகத்தான வெற்றிகளை இந்தியா பதிவு செய்துள்ளது. அந்த வகையில் 2016 டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான இந்தியாவின் த்ரில்லர் வெற்றியை மறக்க முடியாது.
ஆம் அந்தத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் முதல் போட்டியில் தோற்ற இந்தியா பரம எதிரி பாகிஸ்தானை 2வது போட்டியில் வீழ்த்தியது. அதன் காரணமாக 2016 மார்ச் 23ஆம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்தியா களமிறங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
தோனியின் மேஜிக்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா தடுமாற்றமாக விளையாடி வெறும் 147 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணயித்தது. ரோகித் சர்மா 18, ஷிகர் தவான் 23, விராட் கோலி 24, ஹர்திக் பாண்டியா 15, கேப்டன் தோனி 13*, யுவராஜ் சிங் 3, ரவீந்திர ஜடேஜா 12 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறினர். அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 30 (23) ரன்கள் எடுத்தார்.
அதை தொடர்ந்து சேசிங் செய்த வங்கதேசத்துக்கு மிதுன் 1 ரன்னில் அவுட்டானாலும் தமீம் இக்பால் 35, சபீர் ரஹ்மான் 26, கேப்டன் மோர்தசா 6, ஷாகிப் அல் ஹசன் 22 ரன்கள் எடுத்து அவுட்டானார்கள். அதனால் 87/4 என தடுமாறிய வங்கதேசத்துக்கு மிடில் ஆர்டரில் சௌமியா சர்கார் 21, மஹ்மதுல்லா 18, ரன்கள் எடுத்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர். இருப்பினும் 19ஆவது ஓவரில் பும்ரா 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அழுத்தத்தை உண்டாக்கினார்.
இறுதியில் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரில் வங்கதேசத்துக்கு வெறும் 11 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அப்போது முதல் பந்தில் மஹ்மதுல்லா சிங்கிள் எடுத்த நிலையில் 2, 3வது பந்துகளில் அடுத்தடுத்த பவுண்டரிகளை பறக்க விட்ட ஃமுஸ்பிகர் ரஹீம் போட்டி முடிவதற்கு முன்பாகவே வெற்றி உறுதியானதாக நினைத்து அதை கொண்டாடினார்.
அதன் காரணமாக தோல்வி உறுதி என்று இந்திய ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். ஆனால் 4வது பந்தில் தோனி போல சிக்சர் அடித்து ஃபினிஷிங் செய்ய முயற்சித்த ரஹீம் கேட்ச் கொடுத்து அவுட்டான நிலையில் 5வது பந்தில் முகமதுல்லாவும் அதே போல அவுட்டானார். அதனால் கடைசி பந்தில் 2 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட போது டெயில் எண்டர் ஷுவகட்டா தடுமாறுவார் என்பதை முன்கூட்டியே கணித்த தோனி ரன் அவுட் செய்வதற்காக தன்னுடைய ஒற்றை கையுறையை கழற்றி விட்டு ஃபீல்டிங் செய்தார்.
ஆச்சரியப்படும் வகையில் அவரும் கடைசி பந்தை அடிக்காமல் தவற விட்டு சிங்கிள் எடுக்க ஓடினார். மறுபுறம் பந்தை எறிந்தால் வாய்ப்பை தவற விட்டு விடுவோம் என்று கருதிய தோனி வேகமாக ஓடிச்சென்று ஸ்டம்ப் மீது அடித்து ரன் அவுட் செய்தார். அதனால் கடைசி 3 பந்தில் 3 விக்கெட்டுகளை எடுத்த இந்தியா வெறும் 1 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி கைநழுவிச் சென்ற வெற்றியை வசப்படுத்தியது.
இதையும் படிங்க: ராகுல் – ரோஹித் பாய் ஜனவரிலயே சொல்லிட்டாங்க.. சிஎஸ்கே அணியில் 6 பந்தில் அதிர்ஷ்டம் கிடைச்சுது.. துபே பேட்டி
அப்போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்த அஸ்வின் ஆட்டநாயகன் விருது வென்றார். ஆனால் கடைசி பந்தில் கையுறையை கழற்றி விட்டு எரியாமல் பந்தை ஓடிச் சென்று விக்கெட் கீப்பிங்கில் மேஜிக் செய்த கேப்டன் தோனி வெற்றி பெறுவதற்கு முன்பாகவே ஆணவத்தில் ஆடிய வங்கதேசத்தை அடக்கி இந்தியாவின் கொடி பறப்பதற்கு கருப்பு குதிரையாக செயல்பட்டார். அன்றைய நாளில் விக்கெட் கீப்பிங்கில் அவர் நிகழ்த்திய மாஸ்டர்க்ளாஸ் நுணுக்கத்தை இன்று பல இளம் விக்கெட் கீப்பர்கள் பயன்படுத்துகின்றனர்.