- Advertisement -
இந்திய கிரிக்கெட்

101 ரன்ஸ்.. போராடிய வங்கதேசத்தை சாய்த்த இந்தியா.. நங்கூரமாக வெற்றிக்கு வித்திட்ட கில்.. தவானை முந்தி சாதனை

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. அதில் இந்தியா தங்களுடைய போட்டிகளை துபாயில் விளையாடி வருகிறது. அந்தத் தொடரில் இந்தியா தங்களது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. பிப்ரவரி 20ஆம் தேதி இந்திய நேரப்படி மதியம் 2.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு சௌமியா சர்க்கார் 0, கேப்டன் நஜ்முல் சாண்டோ 0, தன்சித் ஹசன் 25, மெஹதி ஹசன் 5, ரஹீம் 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் 35-5 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணிக்கு மிடில் ஆர்டரில் தௌஹீத் ஹ்ரிடாய் – ஜாகிர் அலி ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடினார்கள்.

- Advertisement -

இந்தியா நல்ல பவுலிங்:

அந்த வகையில் 6வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வங்கதேசத்தை மீட்டெடுத்த அந்த ஜோடியில் ஜாகிர் அலி அரை சதத்தை அடித்து 68 ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் சேர்ந்து விளையாடிய தௌஹீத் தனது முதல் சதத்தை அடித்து 100 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்த இந்தியா 49.4 ஓவரில் வங்கதேசத்தை 228 ரன்களுக்கு சுருட்டியது.

நன்றாக பவுலிங் செய்த இந்தியாவுக்கு ஷமி 5, ஹர்ஷிட் ராணா 3, அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு 69 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்த கேப்டன் ரோஹித் சர்மா 41 (36) ரன்களில் அவுட்டானார். எதிர்புறம் கில் நிதானமாக விளையாடிய நிலையில் எதிர்ப்புறம் வந்த விராட் கோலி 22, ஸ்ரேயாஸ் ஐயர் 15, அக்சர் படேல் 8 ரன்களில் அவுட்டாகி சென்றனர்.

- Advertisement -

இந்தியா வெற்றி:

இருப்பினும் மறுபுறம் நிதானத்தைக் காட்டிய கில் அரை சதத்தை கடந்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார். அடுத்ததாக களமிறங்கிய கேஎல் ராகுல் 9 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச்சை வங்கதேசம் தவற விட்டது. அதைப் பயன்படுத்திய ராகுல் 41* (47) ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் சேர்ந்து தொடர்ந்து நிதானத்தை காட்டிய கில் சதத்தை அடித்து 101* (129) ரன்கள் குவித்தார்.

அதனால் 46.3 ஓவரில் 231-4 ரன்கள் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 2025 சாம்பியன்ஸ் டிராபியை வெற்றியுடன் துவங்கியது. இதையும் சேர்த்து 51 இன்னிங்ஸில் கில் தனது 8வது சதத்தை பதிவு செய்துள்ளார்.

இதையும் படிங்க: 35/5 டூ 228.. போராடிய வங்கதேசம்.. இந்தியாவுக்காக ஐசிசி ஒருநாள் தொடரில் ஜஹீர் கானை முந்திய ஷமி மாபெரும் சாதனை

இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 8 சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் ஷிகர் தவான் 57 இன்னிங்ஸில் 8 சதங்கள் அடித்ததே முந்தைய சாதனை. மறுபுறம் வங்கதேசத்துக்கு ரிஷத் ஹொசைன் 2 அதிகபட்சமாக எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

- Advertisement -