- Advertisement -
இந்திய கிரிக்கெட்

18.3 ஓவரிலேயே 188 ரன்ஸ்.. ஹோபார்ட்டில் யாரும் செய்யாததை செய்த இந்தியா.. ஆஸியை வீழ்த்தி உலக சாதனை வெற்றி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நடைபெற்று வருகின்றது. அத்தொடரில் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில் 2வது போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. 3வது போட்டி நவம்பர் இரண்டாம் தேதி ஹோபார்ட் நகரில் இந்திய நேரப்படி மதியம் 1.45 மணிக்கு துவங்கியது.

அந்தப் போட்டியில் நீண்ட நாட்கள் கழித்து டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட்டை 4 ரன்னில் காலி செய்த அர்ஷ்தீப் சிங் அடுத்து வந்த ஜோஸ் இங்கிலீஷையும் 1 ரன்னில் அவுட்டாக்கினார். மறுபுறம் தடுமாறிய கேப்டன் மார்ஷை 11 (14) ரன்னில் அவுட்டாக்கிய வருண் சக்கரவர்த்தி அடுத்து வந்த மிட்சேல் ஓவனை கோல்டன் டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

இந்தியா நல்ல பவுலிங்:

இருப்பினும் மிடில் ஆர்டரில் டிம் டேவிட் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். அவருடன் ஜோடி சேர்ந்த மார்கஸ் ஸ்டோய்னிஸ் தம்முடைய பங்கிற்கு வெளுத்து வாங்கினார். தொடர்ந்து அசத்திய அந்த ஜோடியில் டேவிட் 8 பவுண்டரி 5 சிக்சருடன் அரை சதத்தை அடித்து 74 (38) ரன்கள் குவித்து துபே வேகத்தில் அவுட்டானார். அவருடன் இணைந்து விளையாடிய ஸ்டோய்னிஸ் அரை சதத்தை அடித்து 8 பவுண்டரி சிக்சருடன் 64 (39) ரன்கள் குவித்தார்.

இறுதியில் மேத்தியூ ஷார்ட் 26* (15) ரன்கள் விளாசிய உதவியுடன் 20 ஓவரில் ஆஸ்திரேலியா 186/6 ரன்களை எடுத்தது. இந்தியாவுக்கு அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய இந்திய அணிக்கு அடித்து நொறுக்க முயற்சித்த அபிஷேக் சர்மாவை 25 (16) ரன்களில் காலி செய்த நாதன் எலிஸ் மறுபுறம் நிதானத்தைக் காட்டிய சுப்மன் கில்லையும் 15 (12) ரன்களில் அவுட்டாக்கினார்.

- Advertisement -

ஹோபார்டில் சாதனை வெற்றி:

அடுத்ததாக வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாட முயற்சித்து 24 (11) ரன்கள் விளாசி அவுட்டானார். மிடில் ஆர்டரில் அக்சர் பட்டேல் 17 (12), திலக் வர்மா 29 (26) ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்கள். அதை வீணடிக்காமல் லோயர் ஆர்டரில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அட்டகாசமாக விளையாடி 3 பவுண்டரி 4 சிக்சருடன் 49* (23) ரன்கள் விளாசி மிரட்டினார்.

அவருடன் இணைந்து 3 பவுண்டரியை பறக்க விட்ட ஜிதேஷ் சர்மா 22* (13) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அதனால் 18.3 ஓவரிலேயே 188/5 ரன்களை அடித்த இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இத்தொடரை 1 – 1* (5) என்ற கணக்கில் சமன் செய்து ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்தது.

இதையும் படிங்க: எதுக்கு இவரை டீம்ல எடுத்தீங்க.. வாஷிங்டன் சுந்தருக்கு நேர்ந்த பரிதாபம் – கேப்டன் நீங்க செஞ்சது பெரிய தப்பு

அத்துடன் ஹோபார்ட் மைதானத்தில் டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த முதல் வெளிநாட்டு அணி என்ற உலக சாதனையையும் இந்தியா படைத்தது. இதற்கு முன் அம்மைதானத்தில் விளையாடிய 5 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்ற ஆஸ்திரேலியா முதல் முறையாக இன்று இந்தியாவிடம் தோற்றுள்ளது.

- Advertisement -