இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 2 போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. அதனால் 2012க்குப்பின் தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்து இந்தியா தலை குனிந்துள்ளது.
அதை விட நியூஸிலாந்துக்கு எதிராக வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் இந்தியா அவமானத் தோல்வியையும் பதிவு செய்துள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இலங்கையிடம் அதனுடைய சொந்த மண்ணில் 2 – 0 (2) என்ற கணக்கில் நியூசிலாந்து படுதோல்வியை சந்தித்தது. அப்படிப்பட்ட நியூசிலாந்து அணியிடம் 12 வருடங்கள் கழித்து இந்தியா தோல்வியை சந்தித்தது ஏமாற்றமளிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பசித் அலி கூறியுள்ளார்.
நியூஸிலாந்து அணியிடம்:
அதற்கு சொந்த மண்ணில் எப்படியும் வெற்றி பெற்று விடுவோம் என்ற அதீத தன்னம்பிக்கையுடன் இந்தியா விளையாடியதே காரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “350+ ரன்களை துரத்துவது மிகவும் கடினம் என்று நான் கூறியிருந்தேன். அதற்கு டாப் 3 இந்திய பேட்ஸ்மேன்களில் ஒருவர் சதமடித்திருக்க வேண்டும்”
“இங்கே இந்தியாவின் மோசமான பேட்டிங் உலகிற்கு காண்பிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் 17 விக்கெட்டுகளை நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் எடுத்தனர். இரண்டாவது போட்டியில் நியூசிலாந்து ஸ்பின்னர்கள் 19 விக்கெட்டுகள் எடுத்தனர். இதிலிருந்து இந்திய வீரர்கள் வேகத்தையும் சுழலையும் சிறப்பாக எதிர்கொள்ளவில்லை என்பது தெரிகிறது. பெங்களூருவில் வேகத்துக்கு சாதகமான ஆடுகளத்திலும் இந்தியா தோற்றது”
ஓவர்ஃகான்பிடன்ஸ் இந்தியா:
“புனேவில் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்திலும் இந்தியா தோல்வியை சந்தித்துள்ளது. வங்கதேசத்துக்கு எதிராக இந்தியா 2 நாட்களில் வென்றது. அந்த சமயத்தில் 2 – 0 என்ற கணக்கில் இலங்கை அணி நியூசிலாந்தை எளிதாக தோற்கடித்தனர். அதனால் இந்திய அணியினர் அதீத தன்னம்பிக்கையுடன் இருந்துள்ளார்கள். ஆனால் நியூசிலாந்து தங்களுடைய வீட்டில் திட்டங்களை வகுத்து வந்தனர்”
இதையும் படிங்க: டி20 உலககோப்பை இறுதிபோட்டியை இப்படித்தான் பார்த்தேன்.. மனம் திறந்த தல தோனி – விவரம் இதோ
“இந்தியாவை சொந்த மண்ணில் நியூசிலாந்து தோற்கடிக்கும் என்று யாரும் நினைக்கவில்லை. நியூசிலாந்து அணியே இதை நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் வீட்டில் சரியான திட்டங்களை வகுத்து வென்றுள்ளார்கள்” என்று கூறினார். அப்படி நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்துள்ளதால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறுவதிலும் கடினமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



